
அதாவது கார்களின் டயர்கள் நன்கு நீண்ட ஆயுட்காலத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. ஆனால் 2-வீலர்ஸ் டயர்களின் ஆயுட்காலம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. அதுவும் நாம் பயன்படுத்துவதை பொறுத்தே ஆகும். அத்தகைய 2-வீலர்ஸ் டயர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க சில வழிகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சரியான காற்றழுத்தத்தை தொடர்தல்
தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரைப்படி, டயர்களில் சரியான அளவில் காற்று நிரப்பப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது சோதித்து கொள்வது நல்லது. அனைத்து 2-வீலர்ஸிலும் ஒரே அளவிலான காற்று நிரப்பப்படுவதில்லை. நிரப்பப்படும் காற்றானது இருசக்கர வாகனத்தை பொறுத்து மாறக்கூடும்.

புதியதாக 2-வீலரை வாங்கியவுடன், அது எவ்வளவு மைலேஜ் தரும், என்ஜின் சிறப்பம்சங்கள் எனென்ன? தொழிற்நுட்ப அம்சங்கள் என்னென்ன? என்பவற்றை பார்ப்பதுபோல், முன் மற்றும் பின் டயர்களின் சரியான பிஎஸ்ஐ (PSI), அதாவது ஒரு சதுர இன்ச்சிற்கு பவுண்ட்-விசை எவ்வளவு என்பதையும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

வாகனத்தை நிழலில் பார்க் செய்தல்
நிச்சயமாக எவரொருவருக்கும் தனது வாகனத்தை வெயிலில் நிறுத்துவது பிடிக்காது. ஆனால் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், போதிய பார்க்கிங் வசதியின்மையாலும் வெயிலில் பார்க் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் முடிந்தவரை இதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் பொதுவாகவே ரப்பர்கள் வெப்பத்தினால் சேதமடையக்கூடியவை. இந்த செயல்முறை மெதுவாகவே நடைபெறும் என்றாலும், வெயிலில் நிறுத்துவதால் உங்களுக்கே தெரியாமல் உங்களது 2-வீலர்ஸின் டயர்களின் ஆயுட்காலம் குறையும். டயர்களில் ஆரம்பத்தில் ஏற்படும் விரிசல்களே இதற்கு கண்கூடான சாட்சியாகும்.

உடனடி முடுக்கத்தை தவிர்த்தல்
நம்மில் பெரும்பாலானோரிடம், குறிப்பாக புதியதாக இருசக்கர வாகனங்களை வாங்குவோரிடம் எடுத்தவுடனே டாப்-ஸ்பீடில் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் இவ்வாறான உடனடி முடுக்கத்தினால் 2-வீலரின் பின் டயர் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக சுழலும். இதன் விளைவாக பின் டயர் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவில் சேதமடையக்கூடும்.

இத்தகைய செயல்களினால் டயர் மட்டுமல்ல, 2-வீலரின் பிரேக்குகளும் எளிதில் சேதமடையலாம். ஆதலால் எடுத்தவுடனே உடனடி முடுக்கத்தை தவிர்ப்பது நல்லது. அதேபோல் வாயுவால் செயல்படக்கூடிய சிறந்த பிரேக் அமைப்புகளை கொண்ட இருசக்கர வாகனத்தை பார்த்து தேர்வு செய்வது சிறந்தது.

சாலையின் தரம்
டயர்களின் ஆயுட்காலத்திற்கு சாலையின் தரம் மிக முக்கியமான காரணியாகும். சிறந்த தரமான நெடுஞ்சாலைகளில் அன்றாடம் அதிக நேரம் பயணிப்பீர்கள் என்றால், உங்களது டயர்கள் நீண்ட காலம் உழைக்கும். அதுவே ஆஃப்-ரோடுகளுக்கு அதிகமாக எடுத்து சென்றால், டயரின் பாதிப்பு அதிகமாகும்.

அவ்வப்போது ஓட்டுனரை மாற்றுதல் கூடாது
முடிந்தவரையில் ஒரே உரிமையாளராக 2-வீலரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரைடிங் ஸ்டைல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் அடுத்தவர் வாகனம் என்றாலே கரடு முரடான சாலைகளில் பயணிப்பதற்கு பெரும்பாலானோர் தயங்குவதில்லை. இது டயருக்கு மட்டுமல்ல, மொத்த 2-வீலருக்கும் பொருந்தும்.