Thursday, September 29, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

கிரேசஸ் CC: முதல் LGBTQ+ கிரிக்கெட் கிளப். அதன் தலைமைப் பொறுப்பில் ஒரு இந்தியர்! #PrideMonth ?


21-ம் நூற்றாண்டிலும் பெண்கள் கிரிக்கெட் போதிய வரவேற்பைப் பெறாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் ஓர் ஆணாதிக்க விளையாட்டாகத்தான் கிரிக்கெட்டை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். 50,000 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம் விற்கப்பட்டிருக்கிறது. அதே நாட்டில் இன்னும் முழு நேர பெண்கள் ஐ.பி.எல் தொடருக்கான அறிவிப்பு வரவில்லை. இப்படி ஒரு சூழல் இன்றும் நிலவும் நிலையில்தான், லண்டன் நகரில் 27 வருடங்களுக்கு முன்பே LGBTQ+ வீரர்களுக்கான ஒரு கிரிக்கெட் கிளப் உருவாகியுள்ளது.

உலகில் முதன்முதலாக LGBTQ+ சமூக மக்களுக்கான கிரிக்கெட் கிளப் ஏப்ரல் 1996-ம் ஆண்டு கிங் கிராஸ், சென்ட்ரல் ஸ்டேஷனில் கிரேசஸ் கிரிக்கெட் கிளப் (Graces Cricket Club) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் LGBTQ+ மக்களை ஆதரிக்கும் ஒரு குழுவாகத் தொடங்கி, பின்னர் பலரின் ஆர்வமான பங்கேற்பால் ஒரு அணியாகவே மாறியது அந்த கிளப். தங்கள் முதல் போட்டியை 1997-ல் விளையாடியது அந்த அணி. பழைமையான வெண்டேவர் கிரிக்கெட் கிளப்புடன் முதல் போட்டியை விளையாடிய கிரேசஸ் கிரிக்கெட் கிளப், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி அந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சிறப்பாகச் செயல்படத்தொடங்கிய அணி 1999-ல் விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று மக்களின் கவனத்தை ஈர்த்தது.

கிரேசஸ் கிளப்பின் தற்போதுள்ள தலைவர்களில் ஒருவர் டன்கன் இர்வின். ‘தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான கிரிக்கெட் அணியின் தேவை என்ன?’ என்று 2005-ல் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “கிரிக்கெட்டிற்கும் தன்பால் ஈர்ப்பாளராக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் இதை ஆரம்பித்ததற்கு முக்கிய காரணமே மக்களின் மனநிலைதான். எங்கள் கிளப்பில் உள்ள ஆண்கள், தங்களுக்குக் காதலி இருப்பதாக இதற்குமுன் அவர்கள் விளையாடிய கிளப்பில் பொய் சொல்லியிருந்தார்கள்.

Grace Cricket Club

அதற்குக் காரணம் ஆண்கள் ஒரு சக ஆணைக் காதலிப்பதைச் சொல்லமுடியாத சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையை மாற்றி இங்கு அவர்கள் தாங்களாகவே உண்மையாக வாழ்கிறார்கள். காலம் காலமாக தன்பால் ஈர்ப்பாளரான ஆண்கள் என்றால் இசை, அலங்காரம் என்று வாழ்வார்கள் என்ற ஒரு பிம்பம் உள்ளது. அதைத் தவறு என்று நிரூபித்து, அந்தக் கருத்தை உடைப்பதே எங்களது நோக்கம்” என்று கூறினார் டன்கன் இர்வின்.

இந்த நல்ல நோக்கமும் சர்ச்சையில் சிக்காமல் தப்பிக்கவில்லை. 2000-ம் ஆண்டு பல முன்னணி சர்வதேச ஊடகங்களில் செய்தியாக இடம்பெற்றது கிரேசஸ் கிரிக்கெட் கிளப். இதற்குக் காரணம் அவர்களின் வெற்றிகள் அல்ல, வெறும் கிரேஸ் என்ற பெயர்தான். ஆம்! உலகப் புகழ்பெற்ற பழைமையான கிரிக்கெட்டர் WG கிரேஸின் குடும்பத்தினர், அவர் பெயரில் இந்த கிரிக்கெட் கிளப் செயல்படுவதைப் புகாரளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார்கள். அதற்கு ஊடகங்களிடம் பதிலளித்த அந்த கிளப், “எப்படி நாங்கள் இப்போது ஒரு முன்னோடி கிளப்பாக இருக்கிறோமோ அதுபோல் அவர் அந்தக் காலத்தில் ஒரு முன்னோடி வீரர்” என்று கூறி, தங்கள் கிளப்பின் பெயரைத் தக்க மரியாதையுடன் தக்கவைத்துகொண்டது. அதுமட்டுமல்லாமல், இதை அவர்களுக்குக் கிடைத்த ஒரு இலவச விளம்பரமாகவே பார்த்துள்ளது!

ஹோம் கிரவுண்ட் இல்லாமல் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி வந்த கிளப்பிற்கு 2002-ல் மில் ஹில் பார்க், ஹோம் கிரவுண்டாக அமைந்தது. 2005-ல் கிளப் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, வாரஇறுதி நாள்களில் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு போட்டிகளில் பங்குபெற்றது கிரேசஸ் கிளப். இப்படி வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கிளப், 2007இல் ஒருவழியாக மிடில்செஸ் கிரிக்கெட் லீகில் இரண்டாவது டிவிசனில் இருந்து முன்னேறி முதல் டிவிசனுக்குத் தகுதிபெற்றது.

cropped 6016
Grace Cricket Club

பல வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்த கிளப்பின் முதன்மை நோக்கம் LGBTQ+ மக்களும் கிரிக்கெட்டை விளையாடி மகிழ வேண்டும் என்பதுதான். விளையாட்டு என்பது அனைத்து மக்களுக்குமானது என்று சொல்வது மட்டும் போதாது. யாரும் அதிலிருந்து விடுபட்டவர்களாக ஒருநாளும் உணரக்கூடாது என்பதை நாம் உறுதி செய்து, எல்லோரையும் ஒன்றாய் நடத்துவதிலும்தான் விளையாட்டின் கரு உள்ளது. இந்த கிளப்பில் பங்குபெறும் அனைவரும் ஓர் ஆரோக்கியமான சூழலைப் பெற வேண்டும். எந்த விதமான ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பொறுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் கிரேசஸ் கிரிக்கெட் கிளப் உறுதியாக உள்ளது.

இன்னொரு நெகிழ்ச்சியான விஷயம், இன்று இந்த கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பின் கேப்டனாக ஒரு இந்தியர் இருந்திருக்கிறார் – மனீஷ் மோடி! இந்தியாவில் பிறக்கும் பெரும்பாலான மக்கள் காதலிக்கும் கிரிக்கெட்டை இந்த அகமதாபாத் சிறுவன் மனீஷ் மோடியையும் அவரது குடும்பத்தையும் விட்டுவிடவில்லை. சுற்றி இருந்தவர்களின் ஊக்கம் மனீஷை கிரிக்கெட்டில் தீவிரமாக இறங்கச்செய்தது. இந்திய வீரர் பார்திவ் பட்டேல் இவருடன் ஒரே அகாடமியில் விளையாடியவர்.

அகமதாபாத்தில் உள்ள மொடேரா மைதானத்தில் பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர் மனீஷ். அவருக்கு கிரிக்கெட் மேல் இருந்த காதலும் ஆர்வமும் ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்காக அவரை ஆடச் செய்தது. காலம் போகப் போக ஒரு கட்டத்தில் தனது பாலியல் தன்மையினை உணரத் தொடங்கியுள்ள மனீஷ், இந்தியாவில் உள்ள கலாசாரக் கட்டமைப்பின் காரணத்தால் அதை யாரிடமும் சொல்லாமல் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளார்.

Manish Modi

ஒரு கட்டத்தில் குடும்ப மற்றும் சமூக அழுத்தத்தின் காரணமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்குத் தந்தை ஆகிறார். 2004-ல் இங்கிலாந்தில் வேலை வாய்ப்பு ஒன்று கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு நல்ல வாழ்க்கைக்காக இந்தியாவை விட்டு இங்கிலாந்து செல்கிறார். நல்ல வாழ்க்கை என்றால் வேலைரீதியாக மட்டும் இல்லை, குடும்பரீதியாகவும். அவர் அவராக வாழவும், அதனால் கஷ்டப்படும் மனைவி இந்தியாவில் ஒரு நல்ல வாழ்க்கையைப் பெறவும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கிறார் மனீஷ்.

இங்கிலாந்து சென்று புது வேலைக்குப் பழகிய பின்னர், அங்குள்ள கிரிக்கெட் கிளப் ஒன்றில் மீண்டும் தன் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஆனால் அங்கும் அவரால் அவராக வாழமுடியவில்லை. காதலி, மனைவி, குடும்பம், போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பின்னர் வேலைக்காக லண்டன் சென்ற மனீஷ், அங்கு அவருக்குக் கிடைத்த காதலன் மூலம் கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பைப் பற்றித் தெரிந்துகொண்டு 2008-ல் அணியுடன் இணைகிறார்.

மனீஷ் மோடி இந்த கிளப்பில் தன்னை உணர்ந்தார். உண்மையாகவும் பெருமையாகவும் உணர்ந்தார். இங்குள்ள அனைவருக்கும் அவர் வாழ்க்கை தெரிந்தும் அவரை ஏற்றுக்கொண்டது அவருக்கு வாழ்வில் பெரும் நம்பிக்கையைத் தந்தது.

இந்த கிளப் அவருக்கு அளித்த நம்பிக்கையைக் கொண்டு 2013-ல் தன் பாலினத்தைப் பற்றி தன் தந்தையிடம் மனம் திறந்துள்ளார். இந்திய கலாசாரத்தில் வளர்ந்த தந்தை இதைப் புரிந்துகொள்ள மாட்டார் என்று நினைத்த மனீஷுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. மனீஷின் தந்தை அவரைப் புரிந்துகொண்டு “நீ நீயாக இரு” என்று சொல்லியுள்ளார். இன்றும் மனீஷிற்கு வாழ்வின் ஹீரோ அவரின் தந்தைதான். மேலும் தான் திருமணம் செய்த பெண் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக விவாகரத்து செய்து கொண்டார் மனீஷ். எல்லோரும் அவர்களது வாழ்க்கையை அவர்கள் விரும்பிய மாதிரி வாழ வேண்டும் என்று விரும்புகிறார் மனீஷ் மோடி. இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் விரைவில் LGBTQ+ சமூக மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விளையாட்டு அனைவருக்கும் என்ற உணர்வைப் பெற வேண்டும் என்றும் விரும்புகிறார் மனீஷ்.

கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பிற்கு ஒரு லட்சியம் என்றால் அது நிச்சயம் ஒரு Gay Ashes தொடர் நடக்கவேண்டும் என்பதுதான். இங்குள்ள வீரர்கள் சமீபத்தில் வானவில் நிற ஷூலேஸ் அணிந்து LGBTQ+ சமூகத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அதுபோல் இந்தியாவில் தோனியோ கோலியோ ஆதரவான முன்னெடுப்புகளைக் கொண்டுவந்தால் நிச்சயம் அது சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என்று மனீஷ் மோடி 2019-ல் லண்டனில் உள்ள ஒரு தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

உலகில் ஏதோ ஒரு மூலையில் தொடங்கப்பட்ட ஒரு கிளப்பில் இந்தியாவைச் சேர்ந்த மனீஷ் மோடி இன்று அந்த அணியின் லீடர்ஷிப் குழுவில் ஒருவராக செயல்பட்டு வருகிறார். மனீஷ் மோடி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, வாழ்வின் போரில் வென்ற ஒரு வீரர். இன்னும் பல மனீஷ் மோடிகள் நம் நாட்டில் நிச்சயம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் தைரியமாக வெளிவந்து சாதிப்பதும், சமூகத்திற்கு பயந்து வீட்டில் ஒடுங்கிக்கிடப்பதும் நம் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்ததுதான். நாம் அவர்களை ஊக்குவிக்கக்கூட வேண்டாம். அவர்களைச் சமமாக ஏற்றுக்கொண்டால்போதும். இத்தனை ஆண்டுக்காலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஏற்றுக்கொள்ளப்படுவதே நிச்சயம் ஒரு மாபெரும் ஊக்கம்தான்! வரும் காலங்களில், மனீஷ் மோடிகள் போன்றவர்கள் தங்கள் துறைகளில் சாதிக்க, இந்தியாவிலும் `கிரேசஸ் கிரிக்கெட் கிளப்கள்’ உருவாகவேண்டும்!

Source link

sports.vikatan.com

இரா. மா. அடலேறு

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading