Homeசினிமா செய்திகள்சாணிக் காயிதம்: இது கீர்த்தி சுரேஷின் `ரத்தம், ரணம், ரௌத்திரம்'... ஆனா, பிரச்னை என்னன்னா?

சாணிக் காயிதம்: இது கீர்த்தி சுரேஷின் `ரத்தம், ரணம், ரௌத்திரம்'… ஆனா, பிரச்னை என்னன்னா?


தன்னையும், தன் குடும்பத்தையும் நிர்கதியாக்கியவர்களை பொன்னி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் சாணிக் காயிதம் படத்தின் ஒன்லைன்.

சாதிய அடுக்குமுறை சூழலில் வாழ்கிறார்கள் மாரியும், பொன்னியும். தேர்தலில் நிற்க தன் உடன் இருப்பவர்களை நிர்பந்தப்படுத்தும் மாரியை ஆதிக்க சாதியினர் வெறுக்கிறார்கள். காவல்துறையில் பணியாற்றும் மாரியின் மனைவியான பொன்னி குறித்தும் தகாத வார்த்தைகள் வந்து விழ, பேச்சு அடிதடியாக மாறுகிறது. சாதி வெறியாட்டத்தில் குடிசை கொளுத்தப்படுகிறது, பொன்னி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார். காவல்துறையிலும், நீதித்துறையிலும் படிந்துபோயிருக்கும் சாதிய நபர்களால் வழக்கு ஒன்றுமில்லாமல் செய்யப்படுகிறது. பொன்னி தன் சகோதரரான சங்கையாவுடன் இணைந்து, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

சாணிக் காயிதம்

பொன்னியாக கீர்த்தி சுரேஷ். சிறையில் அவர்களை அடைத்தால் போதுமா, என பொன்னியாக கீர்த்தி போடும் ஸ்கெட்ச் ஒவ்வொன்றும் ‘I Spit on Your Grave’ சினிமா ரகம். ‘ரத்தம், ரணம், ரௌத்திரம்’ என கீர்த்தி பழிவாங்கலின் ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு ரகம். ‘இப்பத் தொடுடா’ என கீர்த்தி எகிறும்போது ரௌத்திரம் பீறிடுகிறது. பொன்னியின் சகோதரர் சங்கையாவாக செல்வராகவன். கால் டவுசரும், காக்கிச் சட்டையும் போட்டுக்கொண்டு தன்னால் எதிர்க்க முடியாத உலகத்தை, தன் தங்கையின் களங்கத்தைத் துடைக்க எதிர்க்கத் துணிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் அதீத பக்குவம், சுடலையின் மீதான சங்கையா பாசத்தில் எதிரொலிக்கிறது.

சாணிக் காயிதத்தில் நம்மை ஈர்க்கக்கூடிய விஷயம் அதன் டெக்னிக்கல் டீம்தான். யாமினி யக்னமூர்த்தியின் கேமராவின் மூலம் நமக்கு இதே உலகம் புதிய கோணத்தில் தெரிகிறது. நாகூரன் ராமச்சந்திரனின் படத்தொகுப்பும், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளும் படத்துக்குப் பெரும் பலம். பின்னணி இசையில் மிகக்குறைவான கருவிகளுடன் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சாம் சிஎஸ். அதீத வன்முறையை திகட்டத் திகட்டத் தரும் படத்தில் தன் எல்லையைக் கடந்து பல வார்த்தைகளை ம்யூட் செய்திருக்கிறது சென்சார்.

சாணிக் காயிதம்

ராக்கி படத்தின் மூலம் வன்முறை அழகியல், வித்தியாசமான கதை சொல்லல், மாறுபட்ட கேமரா கண்கள் என த்தமிழில் ஒரு புதிய அனுபவத்தை நமக்குத் தந்த அருண் மாதேஷ்வரனின் இரண்டாம் திரைப்படம்தான் சாணிக் காயிதம். டாரன்டினோ, பார்க் சான் வூக் மாதிரியான உலக இயக்குநர்கள் தொட்ட களத்தைத் தமிழிலும் ஒருவர் முயல்கிறார் என்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஷயம். ஆனால், தன்னை அழித்தவனை பழிவாங்கல் என்னும் சுருங்கிய கருத்தாக்கத்தில் கிட்டத்தட்ட ‘ராக்கி’யின் பெண் வெர்சனாக மட்டுமே ‘சாணிக் காயிதம்’ விரிகிறது.

வெறுமனே காட்சிகளை அழகாகக் காட்டுவது, வித்தியாசமான கோணங்களை பயன்படுத்துவது, பிளாக் & ஒயிட் ஷாட்களாக, முன்னுக்குப் பின் காட்சிகளை அடுக்குவது மட்டுமே ஒரு சினிமாவை நல்ல சினிமாவாக மாற்றிவிடும் என இயக்குநர் நினைத்துவிட்டாரா தெரியவில்லை.

கதாபாத்திரங்களுக்கான பின்கதை கொஞ்சம் சொல்லப்பட்டாலும், அதனால் என்ன பாதிப்பு வருகிறது என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. அதே போல், வில்லன்களைத் தேடி அலைவதிலும் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை.

சாணிக் காயிதம்

மளிகைக் கடையில் சாமான்களை வாங்க கைப்பையுடன் செல்வது போல பொன்னியும், சங்கையாவும் வேனில் செல்கிறார்கள். விதவிதமாக சித்ரவதை செய்து கொல்வது எப்படி என்பதைத் தவிர அதில் மருந்துக்கும் எந்த விறுவிறுப்பும் இல்லை. அதனாலேயே படத்தில் சித்திரிக்கப்படும் எதிரிகள் கொல்லப்படும் போது அது எவ்வித பாதிப்பையும் உண்டாக்க மறுக்கிறது. கதாபாத்திரங்களுக்கான பாத்திர வரைவில் பெரிதாக மெனக்கெடாமல், கொலை கொலையாய் நடந்துகொண்டே இருக்கிறது. அருண் மாதேஷ்வரனின் உலகத்தில் பெரியவர், சிறியவர் என ஏறக்குறைய எல்லோருமே மூர்க்கமான வன்முறையாளர்கள்தான். ஆனால், அதைப் பார்வையாளர்களிடம் கடத்திய பின்னும், மீண்டும் மீண்டும் அதையே காட்சிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது.

வன்முறை அழகியலுடன் கதாபாத்திர வார்ப்பிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘சாணிக் காயிதம்’ இன்னும் ஜொலித்திருக்கும்.



Source link

cinema.vikatan.com

விகடன் டீம்

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read