Home Sports விளையாட்டு செய்திகள் மான்செஸ்டர் டார்பியில் ஹாலண்ட் அதகளம் – 3 கோல், 2 அசிஸ்ட்! அரண்டு போன யுனைடட்!

மான்செஸ்டர் டார்பியில் ஹாலண்ட் அதகளம் – 3 கோல், 2 அசிஸ்ட்! அரண்டு போன யுனைடட்!

0
மான்செஸ்டர் டார்பியில் ஹாலண்ட் அதகளம் – 3 கோல், 2 அசிஸ்ட்! அரண்டு போன யுனைடட்!

இரண்டு வாரங்கள் கழித்து கிளப் கால்பந்து மீண்டும் திரும்பியிருக்கிறது.

பிரீமியர் லீகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் – டார்பி போட்டியில் எர்லிங் ஹாலண்ட் தாண்டவமாட, 6-3 என யுனைட்டடை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி. மற்றொரு இளம் சிட்டி வீரர் ஃபில் ஃபோடனும் இந்தப் போட்டியில் ஹாட்ரிக் அடித்து அசத்தினார். அதில் 2 கோல்களுக்கு அசிஸ்ட் செய்தது ஹாலண்ட்தான். இந்தக் கலவையில் கெவின் டி புருய்னாவும் தன் மாயத்தை நிகழ்த்த, மொத்த கால்பந்து உலகமும் இந்த மான்செஸ்டர் சிட்டி அணியைப் பார்த்து அரண்டுப் போயிருக்கிறது.

எடிஹாட் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஒருபக்கம் பிரீமியர் லீகுக்குள் நுழைந்த சில போட்டிகளிலேயே சாதனைகளைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் ஹாலண்ட், அவருக்கு அசிஸ்ட் செய்துகொண்டிருக்கும் டி புருய்னா கூட்டணி. மற்றொரு பக்கம், தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று புதிய சரித்திரத்தை எதிர்நோக்கிய பயணத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடட். சரிசமமான போட்டியாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, ஹாலண்ட் – டி புருய்னா கூட்டணி இருக்கும் ஒரு அணிக்கு யாருமே சமம் இல்லை என்பது விரைவிலேயே புரிய வந்தது.

ரூபன் டியாஸ், ஆய்மெரிக் லபோர்ட் போன்றவர்களை பெஞ்சில் அமரவைத்துவிட்டு நாதன் அகே – மானுவேல் அகஞ்சி எனப் புதிய சென்டர் பேக் கூட்டணியோடு களமிறங்கினார் கார்டியோலா. அதனால் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு கோல் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டதால் எரிக் டென் ஹாக் அணிக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

Foden

எட்டாவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து மான்செஸ்டர் சிட்டிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் ஃபில் ஃபோடன். பெர்னார்டோ செல்வா பாக்சுக்குள் அனுப்பிய பந்தை யாரும் எதிர்பாராத வகையில் வந்து ஒரே டச்சில் கோலாக்கினார் அவர்.

Haaland – De Bruyne

அடுத்த சில நிமிடங்களில் ஹால்ண்ட் – டி புருய்னா கூட்டணியின் ருத்ரதாண்டவம் தொடங்கியது.

34வது நிமிடத்தில் கிடைத்த கார்னரை டி புருய்னா சிறப்பாக பெனால்டி ஏரியாவுக்குள் அனுப்ப, சிறப்பாக அதை ஹெட்டர் செய்து கோலாக்கினார் ஹாலண்ட். அந்த கோலுக்குப் பின்பு எழுந்த கரகோஷம் அடங்குவதற்குள் இன்னொரு கோலை அடித்தார் ஹாலண்ட். இதற்கு வித்திட்டதும் டி புருய்னாவேதான். பந்தை டிரிபிள் செய்து முன்னேறிய அவர், இரண்டாவது போஸ்ட்டுக்கு அழகான சிப் மூலம் ஒரு கிராஸ் அனுப்பினார். வேறோரு வீரராக இருந்திருந்தால், அந்த கிராஸ் அவரைக் கடந்து போயிருக்கும். ஆனால் அற்புதமாக டைவ் அடித்து காலை நீட்டி பந்தை போஸ்ட்டுக்குள் அனுப்பினார் ஹாலண்ட். 37 நிமிடங்களுக்குள் 3 கோல்கள் முன்னிலை பெற்றது அந்த அணி.

44வது நிமிடத்தில் ஃபோடனும் தன்னுடைய இரண்டாவது கோலை அடித்தார். இடது விங்கில் டி புருய்னாவிடம் பாஸ் பெற்ற ஹாலண்ட், சிறப்பாக பாக்சுக்குள் ஒரு கிராஸை அனுப்பினார். அதைப் பயன்படுத்தி முன்னிலையை நான்காக்கினார் ஃபோடன்.

Man City Vs Man United

முதல் பாதி 4-0 என முடிந்தது. அந்த நான்காவது கோலுக்குப் பிறகு மனம் நொந்த மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்கள் அப்போதே வெளியேறத் தொடங்கினார்கள்.

இரண்டாவது பாதி தொடங்கியதிலிருந்து மான்செஸ்டர் யுனைடட் அணி சில கோல் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பலனாக 56வது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோல் கிடைத்தது. தன்னுடைய முதல் போட்டியில் கோலடித்த ஆன்டனி, இரண்டாவது போட்டியில் இரண்டாவது கோலை அடித்தார். பாக்சுக்கு வெளியே இருந்து அற்புதமான ஒரு கர்லிங் ஷாட்டை அவர் அடிக்க, பாய்ந்த எடர்சனையும் மீறி கோலானது அந்தப் பந்து.

64வது நிமிடத்தில் செர்ஜியோ கோம்ஸ் கொடுத்த கிராஸை கோலாக்கி தன்னுடைய ஹாட்ரிக்கை நிறைவு செய்தார் ஹாலண்ட்.

இதுவரை 8 பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹாலண்ட், தன்னுடைய மூன்றாவது ஹாட்ரிக்கை நிறைவு செய்தார்.

Haaland & Foden

அதோடு நிற்காத அவர் 73வது நிமிடத்தில் ஃபில் ஃபோடனின் கோலுக்கு அசிஸ்ட்டும் செய்தார். இரண்டு இளம் வீரர்கள் ஹாட்ரிக் அடித்து அசத்த மான்செஸ்டர் யுனைடட் நொறுங்கிப் போனது.

கடைசி நிமிடங்களில் ஆந்தனி மார்ஷியல் இரண்டு கோல்கள் அடித்ததால், இந்தப் போட்டி 6-3 என முடிவுக்கு வந்தது. 8 போட்டிகளில் 20 புள்ளிகள் பெற்றிருக்கும் மான்செஸ்டர் சிட்டி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மான்செஸ்டர் யுனைடட் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறது.

8 போட்டிகளில் 29 கோல்கள் அடித்து நொறுக்கியிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. அதில் 14 கோல்களை ஹாலண்டே அடித்திருக்கிறார். 8 அசிஸ்ட்கள் செய்திருக்கிறார் டி புருய்னா. அந்தக் கூட்டணியின் செயல்பாடு இப்போது ஒவ்வொரு அணியையும் மிரள வைத்துக்கொண்டிருக்கிறது.

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்செனல் 3-1 என ஸ்பர்ஸை வீழ்த்தி தங்களின் முன்னிலையை தக்கவைத்துக்கொண்டது. 7 வெற்றிகள், 1 தோல்வி என 8 போட்டிகளில் 21 புள்ளிகள் பெற்றிருக்கிறது அந்த அணி. அதேசமயம் இந்த சீசனில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கும் லிவர்பூல், எட்டு போட்டிகளில் நான்காவது டிராவை சந்தித்திருக்கிறது. அதனால் 10 புள்ளிகள் மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி.

Points table

பிரீமியர் லீக் – மேட்ச் டே 9 முடிவுகள்

ஆர்செனல் 3 – 1 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

போர்ன்மௌத் 0 – 0 பிரென்ட்ஃபோர்ட்

கிறிஸ்டல் பேலஸ் 1 – 2 செல்சீ

ஃபுல்ஹாம் 1 – 4 நியூகாசிள் யுனைடட்

லிவர்பூல் 3 – 3 பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான்

சௌதாம்ப்டன் 1 – 2 எவர்டன்

வெஸ்ட் ஹாம் யுனைடட் 2 – 0 வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ்

மான்செஸ்டர் சிட்டி 6 – 3 மான்செஸ்டர் யுனைடட்

லீட்ஸ் யுனைடட் 0 – 0 ஆஸ்டன் விலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here