மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) மிக முக்கியமான பிரிவாக ஆட்டோமொபைல்ஸ் தொழில் (Automobiles Business) பிரிவு இருக்கின்றது. நிறுவனத்திற்கு பெருத்த வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பிரிவும் இதுவே ஆகும். சுமார் 55 சதவீதம் வரை வருவாயை ஆட்டோமொபைல்ஸ் பிரிவின் வாயிலாகவே மஹிந்திரா குழுமம் ஈட்டி வருகின்றது.
இத்தகைய பிரிவை மிக சிறப்பானதாக மாற்றும் விதமாக மஹிந்திரா நிறுவனம் சில சீரமைப்பு பணிகளை கையிலெடுத்திருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனத்தின் ஆட்டோமொபைல்ஸ் பிரிவை மூன்றாக பிரிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தி எகனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், மஹிந்திரா குழுமத்தின் இந்த செயல் தற்போது மிக ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் தற்போது மின்சார வாகனங்கள், டிராக்டர் (விவசாயம் சார்ந்த வாகனங்கள்) மற்றும் பயணிகள் வாகனம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றது.
இந்த தொழிலை மூன்றாக பிரிக்கும் திட்டத்தில் மஹிந்திரா குழுமம் களமிறங்கியிருக்கின்றது. தற்போது இவையனைத்தும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (Mahindra & Mahindra) எனும் பிராண்டின்கீழ் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சார வாகன உற்பத்தியை இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஃபினின்ஃபரினாவுடன் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் புனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா, இவி பிரிவிற்கான நிதி திரட்டும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றை தனி நிறுவனமாக மஹிந்திரா மாற்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் மிகப் பெரிய டிராக்டர் தயாரிப்பாளராக மஹிந்திரா இருக்கின்றது. 2007 பஞ்சாப் டிராக்டர்ஸை கொள்முதல் செய்த பின்னரே நாட்டின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தியாளராகவ அது மாறியது. 43 சதவீதம் சந்தை பங்கை இப்பிரிவில் அது கொண்டுள்ளது. இதேபோல் அதிக லாபத்தை ஈட்டி தரும் பிரிவாக பயணிகள் வாகன பிரிவும் இருக்கின்றது.
நிறுவனத்தின் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி ரேஞ்ஜில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் மற்றும் தார் ஆகிய மாடல்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த வாகன மாடல்களுக்கு கிடைக்கும் அதீத வரவேற்பின் காரணத்தினால் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் முதல் மூன்றாவது இடத்தை மஹிந்திரா பிடித்திருக்கின்றது.
இத்தகைய சிறப்பான வரவேற்பை நாட்டில் பெற தொடங்கியிருக்கின்ற இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா குழுமம், அதன் ஆட்டோமொபைல்ஸ் தொழில் பிரிவு மஹிந்திரா மற்றும் மஹிந்திராவை மூன்றாக பிரிக்கும் திட்டத்தில் களமிறங்கியிருக்கின்றது. இது நிறுவனத்தின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை பல மடங்கு உயர்த்த உதவும் என நிறுவனம் நம்புகின்றது.
இதுமட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் கூடுதல் மதிப்பை உருவாக்கி தர முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் தற்போது 100க்கும் அதிகமான நாடுகளில் 20 வகையான வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இங்கு நிறுழனத்திற்கான சந்தை பங்கு சற்றே குறைந்து காணப்படுகின்றது. இதனை வலுவூட்ட புதிய முயற்சிகள் உதவும் என நம்பப்படுகின்றது.
மஹிந்திரா நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு புதிய தயாரிப்புகளைக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், விரைவில் அப்டேட் செய்யப்பட்ட ஸ்கார்பியோ மற்றும் மூன்று புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனத்திற்கு வலுசேர்க்கும் விதமாக ஆட்டோமொபைல்ஸ் பிரிவை மூன்றாக பிரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.