
விமானங்களை இயக்கும் பைலட்கள் சீருடையில்தான் பணியாற்றுவார்கள். அவர்களின் சீருடையில் தொப்பி முக்கியமான ஒன்று. பைலட்கள் என்றாலே தொப்பி நினைவிற்கு வரும் அளவிற்கு, அது நம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. பைலட்களின் சீருடையில் தொப்பி ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

தனித்துவமான அடையாளம்தான் பைலட்கள் தொப்பி அணிவதற்கு பின்னால் இருக்கும் மிகவும் முக்கியமான காரணம். பைலட்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொப்பிகள் பயன்படுகின்றன. விமானத்தின் மற்ற ஊழியர்களிடம் இருந்து இந்த தொப்பிகள் பைலட்களை தனித்து தெரிய செய்கின்றன. ஆனால் அனைத்து விமான நிறுவனங்களின் பைலட்களும் தொப்பி அணிவதில்லை.

ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டுமே தங்களிடம் பணியாற்றும் பைலட்கள் தொப்பி அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. மற்ற சில நிறுவனங்கள் கட்டாயமாக தொப்பி அணிய வேண்டும் என்ற விதிமுறையில் இருந்து பைலட்களுக்கு விலக்கு வழங்கியுள்ளன. அதாவது பைலட்கள் தொப்பி அணியாவிட்டாலும் அவை ஏற்றுக்கொள்கின்றன.

பொதுவாக தொப்பி அணிவது தொடர்பாக பைலட்கள் மத்தியிலேயே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஒரு சில பைலட்கள் தொப்பி அணிவதை விரும்புவது கிடையாது. வேறு சில பைலட்களோ, இதற்கு மாற்றாக தொப்பி அணிவதை நேசிக்கின்றனர். இந்த 2 தரப்பினரும் சொல்லும் காரணங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொப்பி அணிவதை விரும்பாத பைலட்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், ”நாங்கள் அனைவரும் தொப்பிக்கு எதிரானவர்கள். தொப்பி அணிந்தால் முடி கொட்டலாம். இது தலையில் வழுக்கை ஏற்பட காரணமாகிறது. அத்துடன் தொப்பியை கையில் வைத்து கொண்டு நடப்பது முட்டாள்தனமாக தெரிகிறது. மேலும் தொப்பி அணிவது கட்டாயம் என்றால், அதனை எப்போதும் ஞாபகத்தில் வைத்து கொண்டே இருக்க வேண்டும்.

இதனால்தான் தொப்பிகளுக்கு நாங்கள் எதிராக இருக்கிறோம்” என்கின்றனர். தொப்பிகள் பைலட்களுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குவதாக நாங்கள் மேலே கூறியிருந்தோம் அல்லவா? ஆனால் சில சமயங்களில் தொப்பிகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன என்று பைலட்கள் தெரிவிக்கின்றனர்.

”சில சமயங்களில் விமான நிலையத்திற்கு உள்ளே குழப்பம் ஏற்படுவதற்கு எங்கள் தொப்பிகள் காரணமாக உள்ளன. ஒரு சில பயணிகள் எங்களை ‘ஸ்கைகேப்’ (Skycap) என நினைத்து கொள்கின்றனர். எனவே அவர்களுடைய லக்கேஜ்களை சுமந்து வரும்படி எங்களுக்கு உத்தரவிடுகின்றனர். இன்னும் ஒரு சில பயணிகளோ கழிவறைக்கு செல்ல வழி கேட்கின்றனர்” என்பது இந்த தரப்பு பைலட்களின் வாதம்.

விமான நிலையங்களில் போர்ட்டராக வேலை செய்பவர்களைதான் ‘ஸ்கைகேப்’ என அழைக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதாவது சுமை தூக்குபவர்கள்தான் ‘ஸ்கைகேப்’ எனப்படுகின்றனர். இப்படி ஒரு குழப்பம் ஏற்படுவதாலும் ஒரு சில பைலட்கள் தங்கள் சீருடையின் ஒரு அங்கமாக தொப்பி இருப்பதற்கு எதிராக உள்ளனர்.

ஆனால் தொப்பியை விரும்பும் பைலட்களின் வாதம் வேறு விதமாக உள்ளது. ”தொப்பிகள்தான் சீருடையை முழுமை அடைய செய்கின்றன. அவை எங்களுக்கு தொழில்முறையில் மிகவும் நேர்த்தியான தோற்றத்தை வழங்குகின்றன. அத்துடன் தொப்பிகள் தலைமைத்துவத்தையும் எதிரொலிக்கின்றன. எனவே தொப்பி அணிவதை நாங்கள் விரும்புகிறோம்” என்பது இந்த தரப்பு பைலட்களின் கருத்து.

விமான பைலட்களின் தொப்பிக்கு பின்னால் கூட இப்படி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. எது எப்படியோ பைலட்கள் தொப்பி அணிவது என்பது விமான நிறுவனங்களுடைய முடிவு. நாங்கள் ஏற்கனவே கூறியபடி சில விமான நிறுவனங்களில் பணியாற்றினால் தொப்பி அணிய வேண்டும். வேறு சில நிறுவனங்களில் பணியாற்றினால் தொப்பி அணிய வேண்டியதில்லை.

மேலும் தொப்பி அணிவது என்பது விமான பைலட்களின் தனிப்பட்ட விருப்பத்தையும் உள்ளடக்கியது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு விமான நிறுவனமும் வெவ்வேறு கொள்கைகளை வைத்துள்ளன. எனவே இதற்கும் பைலட்களின் ரேங்க், சீனியாரிட்டி போன்றவைகளுக்கும் சம்பந்தம் கிடையாது. ஒரு சிலர் இதுநாள் வரை அப்படி நினைத்திருக்கலாம்.