
இந்தியாவில் நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 டூவீலர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 2,64,009 ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 2,70,923 ஆக உயர்ந்துள்ளது. இது 2.62 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் 1,84,305 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 94,274 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் 95.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. பொதுவாக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளுக்கும் இடையேதான், டாப்-10 டூவீலர்களின் பட்டியலில், முதலிடத்திற்கு மிக கடுமையான போட்டி இருக்கும்.

இம்முறை ஹீரோ ஸ்பிளெண்டர் மிகப்பெரிய வித்தியாசத்துடன் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஹோண்டா சிபி ஷைன் பைக் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 71,869 ஆக இருந்த ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 1,25,947 ஆக உயர்ந்துள்ளது. இது 75.2 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் நான்காவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 1,13,155 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 1,10,724 ஆக மட்டுமே இருந்தது. இது 2.2 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் முதல் 4 இடங்களை ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய 2 நிறுவனங்களுமே பிடித்துள்ள நிலையில், 5வது இடத்தை பஜாஜ் நிறுவனம் பிடித்துள்ளது. அந்த இடத்தில் இருப்பது பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான பல்சர் ஆகும். பஜாஜ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 79,150 பல்சர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 83,723 ஆக உயர்ந்துள்ளது. இது 5.7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஆறாவது இடம் டிவிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அந்த இடத்தில் இருப்பது டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் டிவிஎஸ் நிறுவனம் வெறும் 31,848 ஜூபிடர் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 62,851 ஆக உயர்ந்துள்ளது. இது 97.3 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தையும் டிவிஎஸ் நிறுவனமே பிடித்துள்ளது. அந்த இடத்தை டிவிஎஸ் நிறுவனத்திற்கு பெற்று கொடுத்திருப்பது எக்ஸ்எல்100 மொபட் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 35,897 ஆக இருந்த டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 37,474 ஆக உயர்ந்துள்ளது. இது 4.3 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் சுஸுகி அக்ஸெஸ் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 34,131 அக்ஸெஸ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 31,399 ஆக மட்டுமே இருந்தது. இது 8.7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ க்ளாமர் பைக் ஒன்பதாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 18,759 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 30,105 ஆக உயர்ந்துள்ளது. இது 60.4 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா பத்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 43,313 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் வெறும் 27,732 ஆக சரிந்துள்ளது. இது 35.9 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ள ஒரே டூவீலர் பஜாஜ் பிளாட்டினா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு 3 இடங்களும், ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 2 இடங்களும், சுஸுகி நிறுவனத்திற்கு 1 இடமும் கிடைத்துள்ளது.