Home Cinema ஆதார் விமர்சனம்: சாமானியன் vs காவல்துறை – விமர்சனங்களை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கும் சினிமா!

ஆதார் விமர்சனம்: சாமானியன் vs காவல்துறை – விமர்சனங்களை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கும் சினிமா!

0
ஆதார் விமர்சனம்: சாமானியன் vs காவல்துறை – விமர்சனங்களை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கும் சினிமா!

காவல்நிலையத்துக்கு ஒரு பிரச்னையுடன் வரும் ஒரு சாமானியனுக்கு என்ன நேர்கிறது என்பதைச் சொல்கிறது `ஆதார்’.

மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவி காணாமல் போக, காவல் நிலையத்தில் பிறந்த குழந்தையுடன் புகார் தர வருகிறார் கட்டட வேலை செய்யும் பச்சமுத்து. புகாரைக் வாங்கிக்கொள்ளும் காவல்துறை அதுகுறித்து விசாரிக்க ஆரம்பிக்கிறது. பச்சமுத்துவின் மனைவிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை விசாரணையின் மூலம் அறிந்துகொள்ளும் காவல்துறை, புகாரையும் முடித்து வைக்கிறது. ஆனாலும் இதை நம்ப மறுக்கும் பச்சமுத்து, மீண்டும் போராடத் தொடங்குகிறார்.

ஒரு சாமானியனுக்குப் போராட்டங்கள் என்பதெல்லாம் அவ்வளவு எளிதானதா? காவல்துறை உண்மையில் அவ்வளவு நேர்மையாக எல்லா புகார்களையும் விசாரிக்கிறதா? இங்கு அதிகாரத்தின் முன்னும், பணத்தின் முன்னும் அமைதியாக இருக்கும் ஜனநாயகத்தின் தூண்கள் ஒரு சாதாரண மனிதனுக்காக எந்த எல்லை வரை போராடுகின்றன என்பதை விவாதமாக முன்வைக்கிறது இந்த ‘ஆதார்’.

ஆதார் விமர்சனம்

கட்டட வேலை செய்யும் பச்சமுத்துவாக கருணாஸ். அரசியல் யுகத்திற்குப் பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் கருணாஸுக்குத் தொடர்ச்சியாக நல்ல படங்கள் வாய்க்கின்றன. ‘சூரரைப் போற்று’, ‘சங்கத்தலைவனு’க்குப் பிறகு நல்லதொரு கதைத் தேர்வு. அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். அதிலும் அந்தக் கடைசிக் காட்சியில் ஒட்டுமொத்த நம்பிக்கையும் இழந்துவிட்ட பின்னரும், இன்னும் ஏதோவொரு நம்பிக்கையில் தன் உலகத்தைத் தன் கையில் ஏந்திக்கொண்டு நிற்கும் ஒவ்வொரு மனிதரின் உருவமாகவும் மாறிப் போயிருக்கிறார்.

காவல்நிலைய ரைட்டராக அருண் பாண்டியன். ஏதோ ஒன்றைத் ஏற்கெனவே தொலைத்துவிட்டு, அது தந்த மன வேதனையுடன் ஒவ்வொரு நாளும் நகரும் கதாபாத்திரம். இயல்பிலேயே சாந்தமான ரைட்டர் கதாபாத்திரத்திற்கு அப்படிப் பொருந்திப்போகிறார் அருண் பாண்டியன். காவல்துறையின் கீழ் நிலை ஊழியர்களின் நெஞ்சங்கள் குற்றத்தால் குறுகுறுத்தாலும் அதுகுறித்து கிஞ்சித்தும் அலட்டிக்கொள்ளாத மேல்நிலைய உயர் அதிகாரியாக உமா ரியாஸ்கான், இன்ஸ்பெக்டராக பாகுபலி பிரபாகர் என நிறையப் பொருத்தமான தேர்வுகள். தவறு செய்யும் மனிதர்களாகவே இருந்தாலும் அவர்களுக்குள்ளும் மனிதம் இருக்கிறது என்பதாக வரும் கதாபாத்திரத்தில் இனியா. இப்படிப் படம் நெடுகவே நிறையப் பரிச்சயமான முகங்கள்.

ஆதார் விமர்சனம்

இவ்வளவு யதார்த்தமானதொரு காவல்நிலையத்தையும், காவல்நிலைய மனிதர்களையும் கதைக்குள் கொண்டுவந்த இயக்குநர் ராம்நாத் பழனிகுமாருக்கு முதல் வாழ்த்துகள். காவல்நிலையத்தில் நிகழும் பல யதார்த்தமான விஷயங்களையும், ஒவ்வொரு படிநிலையிலும் அவர்களுக்குள் இருக்கும் அதிகாரத்தையும் மனதளவில் இருக்கும் அலட்சியப் போக்கையும் சரியாகக் கவனித்துக் கதை எழுதியிருக்கிறார். இரண்டாம் பாதியில் அந்த ட்விஸ்ட் வரும்வரை, நமக்குமே கூட காவல்துறையின் மீது நம்பிக்கை வரும்படியே இருக்கிறது அவருடைய திரைக்கதை. ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பது வெறும் வெற்று வார்த்தைகளாகவே மாறிவிட்டதொரு சூழலில், ஒரு சாதாரண மனிதனின் பிரச்னைக்குக் காவல்துறையால் தீர்வு தர முடியுமா, அவர்களின் அதிகாரம் அவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

முதல்வரின் தனிக் கவனத்துக்கே சில விஷயங்களைக் கொண்டு சென்றாலும், கரை படிந்திருக்கும் இந்த சிஸ்டத்தால் அதை ஒன்றுமே செய்யமுடியாது என போல்டாகவும் சில விஷயங்களைக் காட்டியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்களில் ‘தேன் மிட்டாய்’ பாடல் நல்லதொரு மெலடி. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனித்து இருக்கலாம். அதே போல், குழந்தையின் அழுகை சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லிவிட்ட பின்னரும், பார்வையாளரை உருகவைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காக மட்டுமே மீண்டும் மீண்டும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவும், ராமரின் படத்தொகுப்பும் படத்துக்குப் பலம்.

ஆதார் விமர்சனம்

இரண்டாம் பாதியில் வரும் அந்த ட்விஸ்ட் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையுடன் இருந்திருக்கலாம். அதேபோல, சில துணை நடிகர்களிடம் இன்னும் யதார்த்தமானதொரு நடிப்பை வாங்கியிருக்கலாம். கதையாகச் சிறந்ததொரு படைப்பை எழுதிவிட்ட இயக்குநர், நான்-லீனியாராகக் காட்சிக்குக் காட்சி மாற்றி மாற்றிக் கதை சொல்லும் யுக்தியைச் சற்றே குறைத்திருக்கலாம். அது ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் சேர்க்காமல் இயல்பான கதையோடு ஒன்றவிடாமல் செய்திருக்கிறது. அதே போல், படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் இன்னமும் வலுவானதொரு தொடர்பு இருந்திருக்கலாம்.

எடுத்துக்கொண்ட களம், ஒருவனின் தீர்வில்லாத போராட்டம், அரசு இயந்திரத்தின் பாரா முகம் போன்றவற்றால் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் சமூகத்துக்குத் தேவையான நல்லதொரு படைப்பாகிறது இந்த `ஆதார்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here