Homeசினிமா செய்திகள்திரைத்துறையை வாழவைக்க வேண்டுகிறோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு ‘மாநாடு’ தயாரிப்பாளர் கடிதம் | Maanaadu Producer Suresh...

திரைத்துறையை வாழவைக்க வேண்டுகிறோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு ‘மாநாடு’ தயாரிப்பாளர் கடிதம் | Maanaadu Producer Suresh Kamatchi letter to CM Stalin


தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே திரையரங்கில் நுழைய அனுமதி என்ற தமிழக அரசின் அறிவிப்பு தொடர்பாக ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் சமீபத்தில் திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழக சுகாதாரத்துறை அமல்படுத்தியது. இதனடிப்படையில் திரையரங்குகளுக்குச் செல்வோர் கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”தமிழக முதல்வருக்கு,

வணக்கம்.

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் தொடங்கிவிட்டன.

அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. ‘அண்ணாத்த’ மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. ஐம்பது விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பைத் தந்தது திரைத் துறையினர் நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியைத் தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு.

ஆனால், இப்போது தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்குக் கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்தே வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும்.

ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களைச் சான்றிதழ் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள். அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.

தயவுகூர்ந்து 18 வயதிற்குக் கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழவைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்… திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.

நன்றி”.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.





Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read