Homeசினிமா செய்திகள்'தில்' வெளியாகி 20 ஆண்டுகள்: சீயான் விக்ரமை ஆக்‌ஷன் ஹீரோவாக  நிலைநிறுத்திய படம்  | dhill...

‘தில்’ வெளியாகி 20 ஆண்டுகள்: சீயான் விக்ரமை ஆக்‌ஷன் ஹீரோவாக  நிலைநிறுத்திய படம்  | dhill release day special article


இன்றைய தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களில் ஒருவராகவும், கதாபாத்திரத்துக்காகத் தன்னை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வருத்திக்கொள்ளும் அதீத அர்ப்பணிப்புக்காகப் புகழ்பெற்ற நடிகருமான விக்ரமின் திரைவாழ்வில் மிக முக்கியமான வெற்றிப் படமான ‘தில்’ 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் (ஜூலை 13) வெளியானது.

1990களிலிருந்து திரைப்படங்களில் நாயகனாகவும், துணை நாயகனாகவும் நடித்துவந்த விக்ரமின் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது இயக்குநர் பாலாவின் ‘சேது’. அதற்கு முன்பே அழகான தோற்றம், குறைகளற்ற நடிப்பு என்று பார்வையாளர்களிடம் நல்ல எண்ணத்தைத் தோற்றுவித்திருந்தார் விக்ரம். ஆனால், அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருக்கவில்லை. அவருக்கான கவனமும் போதுமான அளவு கிடைக்கவில்லை 1999 டிசம்பரில் வெளியான ‘சேது’தான் விக்ரம் மீது புகழ் வெளிச்சத்தைக் குவித்ததோடு அவர் ஒரு அபாரமான தனித்துவமிக்க நடிகர் என்னும் மரியாதையைத் திரையுலகிலும் பரவலான ரசிகர்களிடமும் ஏற்படுத்தியது. விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த படங்களை அனைவரையும் ஆவலுடன் எதிர்நோக்க வைத்தது.

‘சேது’ வெற்றிகுப் பிறகு சென்னை லயோலா கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பரும் மம்மூட்டி நடித்த ‘எதிரும் புதிரும்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தவருமான தரணி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஆயத்தமானார் விக்ரம். அந்தப் படம்தான் ‘தில்’. ‘சேது’ விக்ரமை ஒரு தரமான நடிகராக அடையாளப்படுத்தியதென்றால் ‘தில்’ விக்ரமை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக நிறுவியது. எந்த ஒரு நாயக நடிகரின் பயணத்திலும் நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடிப்பதற்கு ஆக்‌ஷன் படங்களின் வெற்றி இன்றியமையாதது. அந்த வகையில் ‘தில்’ படத்தின் வெற்றி விக்ரமுக்கு மிக முக்கியமானது.

காவல்துறை அதிகாரியை நாயகனாகக் கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றிபெற்றுள்ளன. ‘தில்’ திரைப்படம் காவல்துறையை நேசித்து காவல் பணியில் இணைவதற்காகத் தன்னை உடல்ரீதியாகவும் உளப்பூர்வமாகவும் முழுமையாகத் தகுதிப்படுத்திக்கொண்ட நேர்வழியும் முயலும் ஒரு இளைஞனின் கதை. அவன் அந்தப் பயணத்தில் எதிர்கொள்ளும் தடைகளையும், தடைகளைக் கடந்து அவன் தன் இலக்கை அடைவதையும் சுவாரஸ்யமான தருணங்கள் நிறைந்த பரபரப்பான திரைக்கதையுடன் அளித்தது ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருசேரக் கவர்ந்தது. வணிகரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றதோடு விமர்சகர்களின் பாராட்டு மழையிலும் நனைந்தது.

காவல்துறையின் மீதான மக்கள் மரியாதையைத் தக்கவைக்கப் பாடுபடும் நேர்மையான அதிகாரிகளுக்கும் அந்தத் துறையில் நிலவும் சீரழிவுகளின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் சுயநல அதிகாரிகளுக்கும் இடையிலான யுத்தமாக இந்தப் படத்தின் கதையை அமைத்தார் இயக்குநர் தரணி.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, காவல்துறையில் இணைந்து பணியாற்றத் தகுதிப்படுத்திக் கொள்வது, கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது, பணிக்கான சோதனைகளிலும் போட்டிகளிலும் பங்கேற்பது, நட்பு வட்டத்துடன் நேரம் கழிப்பது, அழகான குடும்பத்துக்குத் துணையிருப்பது, அன்பான தங்கையைப் பாதுகாப்பது, மச்சானின் தங்கை மீது வரும் காதலை காவல்துறை பணிக்காக இழக்கத் துணிவது, இந்தப் பயணத்தில் ஒரு கொடிய காவல் அதிகாரியின் எதிர்ப்பைச் சம்பாதிப்பது, அவரால் விளையும் தீங்குகளில் சிக்கி மீண்டும் அந்தத் தீய அதிகாரியைத் தன் உடல்பலத்தாலும் மதிநுட்பத்தாலும் அம்பலப்படுத்தி காவல்துறை அதிகாரியாகி தன்னுடைய இலக்கை அடைவதே நாயகனின் கதை.

ஆக்‌ஷனை முதன்மைப்படுத்தினாலும் நகைச்சுவை, குடும்ப சென்டிமென்ட், காதல் என அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்வதற்கான அம்சங்களைச் சரியான விகிதத்தில் சேர்த்து அறுசுவை விருந்துபோன்ற திரைக்கதையை அமைத்திருப்பார் தரணி. தொடக்கம் முதல் இறுதிவரை தொய்வின்றி பயணிக்கும் திரைக்கதையும் வேகமான படமாக்கமும் தரணி என்னும் இயக்குநரின் தனித்துவ அடையாளங்கள் ஆயின. இந்தப் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் தரணியை ஒரு தவிர்க்க முடியாத படைப்பாளியாக நிலைநிறுத்தியது.

சிகை அலங்காரம். கட்டுக்கோப்பான உடலமைப்பு, நறுக்கென்று கத்தரிக்கப்பட்ட மீசை, ஆர்வமும் ஆவேசமும் நிறைந்த கண்கள் எனக் காவல்துறை அதிகாரியாவதற்காக முயலும் நாயகன் கதாபாத்திரத்துக்குத் தன்னைவிட வேறொரு நடிகர் பொருத்தமாக இருக்க முடியாது என்று நிரூபித்தார் விக்ரம். அதோடு எதிரியின் ஆட்கள் தான் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து சூறையாடி விட்டுப் பெற்றோரை அச்சுறுத்திவிட்டுச் சென்றதை அறிந்தவுடன் கண்களிலும் பேச்சிலும் சாமானிய மனிதனின் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் ஆக்‌ஷன் படங்களில் அற்புதமான நடிப்பையும் வழங்க முடியும் என்று நிரூபித்திருப்பார்.

நாயகியாக லைலா அழகான காதல் காட்சிகளுக்கு வலுசேர்த்தார். நாயகனின் நண்பர்களாக விவேக்-மயில்சாமி-வையாபுரி மூவர் கூட்டணியின் நகைச்சுவை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக மெகாசீரியல் மகாதேவன் என்னும் கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்குக் கதை-வசனம் எழுதும் கதாபாத்திரத்தின் மூலமாக அந்தக் காலகட்டத்தில் தொடங்கியிருந்த நெடுந்தொடர்களில் நிலவிய அபத்தங்களைப் பகடி செய்திருப்பார் விவேக்.

இந்தப் படத்தின் வில்லனாக அனைத்து கெட்ட குணங்களும் நிரம்பிய காவல்துறை அதிகாரியாக தமிழுக்கு அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த தரமான வில்லன்/ துணை நடிகர்களில் ஒருவராகப் பரிணமித்தார். நேர்மையான காவல் அதிகாரியாக நாசர், விக்ரமைப் போலவே காவல்துறை பணிக்கான பயிற்சியில் இருக்கும் உயிர் நண்பனாக நடித்தவர், தங்கையாக தீபா வெங்கட், தங்கை கணவராக ஆகாஷ், பெற்றோராக ராஜசேகர்-கலைவாணி எனத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் நடிப்பைத் தந்திருந்தனர்.

வித்யாசாகர் இசையில் ‘உன் சமையலறையில்’ என்னும் டூயட் பாடல் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த காதல் மெலடிகளின் பட்டியலில் நீங்கா இடம்பெற்றுவிட்டது. இசைக்காகவும் கபிலனின் கவித்துவம் நிறைந்த காதல் வரிகளுக்காகவும் தனிக்கவனம் பெற்றது. ‘தில் தில்’ என்று அனைத்து வரிகளிலும் வருவதைப் போல் அமைந்த துடிப்பான நாயக அறிமுகப் பாடல், ‘ஓ நண்பனே’ என்னும் நட்பின் மேன்மையை உணர்த்தும் பாடல், மாணிக்க விநாயகத்தின் தனித்துவமான குரலுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ‘கண்ணுக்குள்ள கெலுத்தி’ என்னும் ஜாலியான டூயட் பாடல், ‘மச்சான் மீச வீச்சருவா’ என்னும் பாடல் என அனைத்துப் பாடல்களுமே இசை ரசிகர்களைக் கவர்ந்தன. இன்றைக்கும் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் பாடல்களாக இருக்கின்றன.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு, லெனின் – வி.டி.விஜயன் படத்தொகுப்பு என அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களும் பரபரப்பும் கலகலப்பும் மிக்க திரைக்கதை திரையில் மேலும் சிறப்பாக வெளிப்படத் தக்க துணைபுரிந்தன.

‘தில்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த சில ஆண்டுகளில் விக்ரம்-தரணி இருவரும் மீண்டும் இணைந்து ‘தூள்’ என்னும் இன்னும் பெரிய ஆக்‌ஷன் வெற்றிப் படத்தைக் கொடுத்தார்கள். தெலுங்கு, இந்தி, வங்கம், கன்னடம் என நான்கு மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது ‘தில்’. இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் பரவலான ரசிகர்களால் பார்க்கப்படும் படமாகத் திகழ்கிறது. வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் ‘தில்’ படத்தின் இளமைப் பொலிவு குலையவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read