Homeசினிமா செய்திகள்முதல் பார்வை | கூகுள் குட்டப்பா - அசல் படைப்பை பழிவாங்கிய ரீமேக்! | Koogle Kuttappa...

முதல் பார்வை | கூகுள் குட்டப்பா – அசல் படைப்பை பழிவாங்கிய ரீமேக்! | Koogle Kuttappa movie review


தந்தைக்கும் மகனுக்குமான உறவுக்கு இடையே மகனின் இடத்தை ஒரு ரோபோ நிரப்பினால் என்ன நடக்கும் என்பது தான் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஒன்லைன்.

2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா. கோவையில் தனது மகன் தர்ஷனுடன் வசித்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். ரோபோடிக் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் மகனை சொந்த ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது முட்டுக்கட்டை போடுகிறார் தந்தை. அவரது விருப்பத்தையும் மீறி ஜெர்மன் செல்லும் தர்ஷன், தந்தைக்கு உதவியாக ஒரு ரோபோவை வீட்டுக்கு கொண்டு வருகிறார். அந்த ரோபோவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்குமான உறவின் பிணைப்பு, அதனால் ஏற்படும் சிக்கல்கள் என நீள்கிறது படத்தின் கதை.

மலையாளத்திலே கூட சோபின் சாஹிரின் பெயர் சுப்ரமணியன் தான். ஆனால், இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரின் பெயர் சுப்ரமணி கவுண்டர். இதில் சாதிப்பெயரை சேர்ப்பதற்கான தேவை என்ன வந்தது என்பது தெரியவில்லை. ஒரு காட்சியில் ‘சேட்’டா என அழைக்கும்போது, ‘நான் கவுண்டர்’ என கே.எஸ்.ரவிக்குமார் பேசுவதில் என்ன பெருமை இருந்துவிடப் போகிறது? அதேபோல படம் முழுக்க காமெடி என்ற பெயரில் யோகிபாபுவின் நிறத்தையும், உருவத்தையும் கேலி செய்துள்ளனர். இன்னும் எத்தனை நாட்களுக்கு, மற்றவரின் உருவத்தையும், உடலையும் நகைச்சுவையாக காட்டப்போகிறீர்கள் தமிழ் சினிமா இயக்குநர்களே?.

‘கரடிமூஞ்சு’ ‘காஞ்ச மொழகா’ ‘கம்பி முடி’ ‘பெருச்சாளி’ ‘துணி துவைக்குற கல்லு’ இது போன்ற வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றன. மலையாள சினிமாவின் அத்தனை உணர்வுகளையும் ஒரேயடியாக மழுங்கச்செய்கின்றன மேற்கண்ட வசனங்கள். தயவு செய்து இது காமெடியல்ல என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல, ‘நல்ல அப்பனுக்கு பொறந்திருந்தா’ போன்ற பிற்போக்குத்தனமான வசனங்கள் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்?

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் காட்சிகள் உணர்வுகளால் பார்வையாளனுக்கு அழகாக கடத்தப்பட்டிருக்கும். ஆனால், கூகுள் குட்டப்பா நீண்ட வசனங்களால் உணர்வை கடத்த முயற்சித்து தோற்றிருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பின் மூலம் தான் சார்ந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால், தர்ஷனுக்கு அதிகமான நடிப்பு பயிற்சி தேவை. எக்ஸ்பிரஷனில் அதீத கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. லாஸ்லியா கடமைக்கு வந்து செல்கிறார். இருவருக்குமான காதல் காட்சிகள் நாடகத்தன்மை. யோகிபாபுவுக்கு ஏற்ற காமெடி ட்ராக்குகளை எழுதி அவரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இனியும் உருவகேலிக்கான ஒரு நபராக மட்டும் அந்த நடிகரை தொடரவிடக்கூடாது. ப்ராங்க்ஸ்டர் ராகுல் கதாபாத்திரத்தை எழுதிய விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எமோஷனல் கனெக்ட் தான் படத்தின் உயிர். ஆனால், அதற்கான ஸ்பேஸ் இருந்தும் படத்தில் ரோபோவுக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், தர்ஷனுக்குமான உறவின் கணத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் தடுமாறியிருக்கிறார் இயக்குநர். ஆனால், ஆண்ட்ராய்டு குஞ்சப்பனில் இந்த உறவுகளுக்கிடையிலான உணர்வுகளை கச்சிதமாக கடத்தியிருப்பார் ரதீஷ் பாலகிருஷ்ணன். படத்தின் முதல் பாதி எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் கடப்பது சோர்வைத் தருகிறது. ரோபோவின் வருகைக்கு பிறகான சில காட்சிகள் ஆறுதல்.

அர்வியின் ஒளிப்பதிவில் கோவையின் சில காட்சிகள் இதம். ஜிப்ரான் இசையில் சென்டிமெண்ட் பாடலுக்கு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் காட்சிக்கு பலம் சேர்த்திருக்கும். மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, தவறுகளை களைத்திருந்தால், மலையாள படத்தை பிரதிபலித்திருக்கலாம்.

மலையாள சினிமாவை பழிவாங்கும் முயற்சிகள் ‘ஹாஸ்டல்’,’கூகுள் குட்டப்பா’ ‘விசித்திரன்’ என நீள்கிறது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read