Homeதமிழ் Newsஆரோக்கியம்முத்தம்மாளின் கோரிக்கையும் சத்திரம் பேசும் சரபோஜியின் காதலும்  | Story of Thanjavur Muthammal Chathiram

முத்தம்மாளின் கோரிக்கையும் சத்திரம் பேசும் சரபோஜியின் காதலும்  | Story of Thanjavur Muthammal Chathiram


ஒரத்தநாட்டில் 200 ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய சத்திரம் உள்ளது. சத்திரத்தோடு, கோயில், குளம், கல்விக்கூடம், மருத்துவமனை என்று ஒரே சமயத்தில் 5,000 பேர் தங்கக்கூடிய பிரம்மாண்டமான மாளிகை தான் முத்தம்மாள் சத்திரம். யார் இந்த முத்தம்மாள்?

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் புகழ்பெற்றவர் இரண்டாம் சரபோஜி மன்னர். பன்முக ஆளுமையும் ஆற்றலும் திறமையும் கொண்ட சரபோஜி மன்னர், அறிவுப் பசிக்கு சரஸ்வதி மகால் நூலகத்தை விரிவுபடுத்தியது போல், பசிப்பிணி தீர்க்கவும், உடற்பிணி நீக்கவும், கல்விப் பணியாற்றவும் உருவாக்கிய சத்திர தர்மங்களுள் ஒன்று தான் முத்தம்மாள் சத்திரம்.

தத்துப்பிள்ளை: 10 வயது ராஜாராம் என்ற பாலகன், மஹாராஷ்டிரத்திலிருந்து தஞ்சாவூர் அழைத்துவரப்பட்டு, வாரிசு இல்லாத துளஜா மன்னரின் தத்துப்புத்திரனாக, சரபோஜி என்ற பெயருடன் 22-வது வயதில் தஞ்சையின் மன்னராகப் பட்டம் சூட்டப்பட்டார். சரபோஜி பட்டம் ஏற்கும்முன், தஞ்சை அரண்மனை உயரதிகாரியின் தங்கையும் பேரழகியுமான முத்தம்மாள் மீது காதல்வயப்பட்டார்.

சட்டபூர்வமான மனைவியல்லாத முத்தம்மாள் இரண்டு முறை கருவுற்றார். முதல் குழந்தை பிறந்து இறந்தது. இரண்டாவது குழந்தை இறந்தே பிறந்தது. பிரசவத்தின் போது முத்தம்மாளும் இறந்து போனார்.

காதலியின் கோரிக்கை: முத்தம்மாள் மரணப்படுக்கையில் இருந்தபோது கதறி அழுத மன்னரிடம், அந்த அம்மையார் கேட்ட வரம் “என் பெயர் என்றும் விளங்கும்படியாகச் சத்திர தர்மம் ஏற்படுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு இருக்க வேண்டும்” என்பதுதான்.

சரபோஜி தன் காதலியின் நினைவாகத் தன் முன்னோர்களின் கட்டிடக் கலைப் பாணியிலேயே மிகப் பெரிய மாளிகையை ஒரத்தநாட்டில் எடுப்பித்தார். ஏற்கெனவே செயல்பட்டுவந்த வழிப்போக்கர்களுக்கான சத்திரங்களில் தங்குமிடம், உணவு, மருந்து என்று அனைத்துமே இலவசமாகவே வழங்கப்பட்டன.

இதையே முதன்மைக் காரணியாகக் கொண்டு அனைத்து வசதிகள், அரண்மனையைப் போன்ற அழகுடன், கலைகளின் இருப்பிடமாக முத்தம்மாள் சத்திரம் உருவானது. ஒரே சமயத்தில் 5,000 பேர் உண்டு, உறங்கி ஓய்வெடுப்பதற்கான வசதிகளும், மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும், கல்விக்கூடமும் தனித்தனியாக அமைக்கப்பட்டன.

அழகு கலையும் அன்னசத்திரமும்: ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கட்டிடத்தின் கிழக்குப் பகுதி நுழைவுவாயிலுக்கு மேலே மராத்தி மொழியில் அமைந்த மூன்று வரிக் கல்வெட்டு, இச்சத்திரத்தின் நோக்கத்தையும், கட்டப்பட்ட ஆண்டுபற்றியும் பதிவுசெய்துள்ளது. கீழ்த் தளம் தேர் வடிவில் குதிரை, யானை இழுத்துச்செல்வதுபோல் கருங்கல் சிற்பங்கள், செங்கல் செதுக்குச் சிற்பங்கள், சுதைச் சிற்பங்களுடன் கலைக்கூடமாகவே காட்சியளிக்கிறது.

தர்மசத்திரத்தின் மேல்தளம் ராஜஸ்தானி பாணியில் மாடம், கனமான சுவர், உருளை வடிவப் பெரிய தூண்கள், நடைபாதைகள், முற்றங்கள், பூஜை அறைகள், கிணறுகள், சத்திர அலுவலர்கள், பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகள், காய்கறித் தோட்டம், மாட்டுப் பண்ணை என்று அனைத்து வசதிகளுடன் அமைந்து கலைக்கூடமாக இருப்பதுடன், அன்னச் சத்திரமும் அழகுடன் திகழ்ந்திருக்கிறது.

சத்திரத்தின் நிர்வாக, பராமரிப்பு, நிதி ஆதாரத்துக்காக, ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள கிராமங்கள் சத்திரத்தின் சொத்துக்களாக இருந்தன. ஊர் எல்லைக்குள் சுங்க வரியும், சாராயக் குத்தகை வரியும் சத்திரத்தின் நிர்வாகச் செலவுக்கு வழங்கப்பட்டன. சத்திரத்தின் வருவாயை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் திருப்பிவிடக் கூடாது. பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் அரண்மனையிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

> இது, தஞ்சை வரலாற்று ஆய்வாளர்,அய்யம்பேட்டை என்.செல்வராஜ் எழுதிய ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read