41 ஆண்டு கால ஒலிம்பிக் தாகம் தீர உதவிய நவீன் பட்நாயக்: ஒரு பார்வை | 41-year Olympic drought ends. How Naveen Patnaik helped Indian hockey

0
12
41 ஆண்டு கால ஒலிம்பிக் தாகம் தீர உதவிய நவீன் பட்நாயக்: ஒரு பார்வை | 41-year Olympic drought ends. How Naveen Patnaik helped Indian hockey


டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியி்ன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பி்க்கில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது.

இந்திய ஹாக்கி வரலாற்றில் 41 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காத்திருப்பு தான். ஆனால், அந்த நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர உதவியிருக்கிறார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

1980 ஒலிம்பிக்ஸும் அதன் பின்னர் உருவான சூழலும்:

1980 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனில் (USSR) ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றது. அந்தப் போட்டியை உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு நாடுகளும் புறக்கணித்திருந்தன. இந்தியாவில், அவசரநிலைக்குப் பின்னர் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்திருந்தார்.

அப்போது இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்று திரும்பியது. அந்தப் பதக்கத்தைப் பெற வெளியில் இருந்து யாரும் தனியாக உதவி செய்யவில்லை.

ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா வென்றுள்ள வெண்கலப் பதக்கத்தின் பின்னணியில் ஒடிசா அரசு இருக்கிறது.

ஒடிசா அரசும் இந்திய ஹாக்கி அணியும் ஓர் ஒப்பந்தத்துக்குள் வந்ததே ஒரு சுவாரஸ்யக் கதை தான். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பள்ளி பயின்றபோது ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இருந்துள்ளார். பல ஆண்டுகளாகியும் அவருக்குள் ஹாக்கி வேட்கை அழியாமல் உயிர்ப்புடன் இருந்துள்ளது. அதன் காரணமாகவே தற்போது அவர் தலைமையிலான ஒடிசா அரசு ஹாக்கி அணியின் ஸ்பான்சராக மாறியது.

2018 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந்துவந்த சஹாரா நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெற்றது. வேறு யாரும் ஸ்பான்சர்ஷிப்புக்கு முன்வரவும் இல்லை. கிரிக்கெட் போன்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ள விளையாட்டுகளுக்கு ஸ்பான்சர்கள் போட்டாபோட்டி குவிந்தனர்.

அப்போது தான் ஒடிசா அரசு தலையிட்டது. ஹாக்கி இந்தியாவுடன் ரூ.100 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருக்க முடிவு செய்தது.

இதோ, இப்போது மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், மகளிர் அணியின் திறன் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதை வென்றுள்ளது.

ஆடவர் அணியோ 41 ஆண்டு கால பதக்க தாகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரீஜேஷ், ஒடிசாவை தனது அணியின் இரண்டாவது வீடு என்று குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

ஒடிசா அரசு நடத்திய போட்டிகள்:

2014ல் சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கிப் போட்டியை நடத்தி நவீன் பட்நாயக் அரசு தனது உதவிக்கரத்தை முதன்முதலில் நீட்டியது. 2017 ஆம் ஆண்டு கலிங்கா லேன்சர்ஸ் க்ளப் போட்டியை ஒடிசா அரசு ஏற்று நடத்தியது. 2018 ஆம் ஆண்டு ஹாக்கி வேர்ல்டு லீக் போட்டியை நடத்தியது.

2020 ஆம் ஆண்டு FIH (சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு) ஆடவர் போட்டி இறுதிச்சுற்று, ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப்போட்டி 2019, எஃப்ஐஎச் ப்ரோ லீக் 2020 ஆகிய போட்டிகளையும் நவீன் பட்நாயக் அரசு முன்நின்று நடத்தியது. வரும் 2023 ஆம் ஆண்டு வரை இந்திய ஹாக்கி அணியுடனான நவீன் பட்நாயக் அரசின் தொடர்பு நீடிக்கும். அந்த ஆண்டு இந்தியா, FIH (சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு) உலகக் கோப்பை போட்டியை நடத்தவிருக்கிறது. ஒடிசாவிலிருந்து பிரேந்திர லக்ரா, தீப் கிரேஸ் எக்கா போன்ற சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை இந்திய அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நவீன் பட்நாயக்கின் பாராட்டு:

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியினருடன் கலந்துரையாடிய நவீன் பட்நாயக், “நமது இந்திய ஹாக்கி அணிக்கு மனமார்ந்த பாராட்டுகள். உங்களால் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. ஒடிசா என்றும் உங்கள் பின்னால் துணை நிற்கும். வரும் 16 ஆம் தேதி புவனேஸ்வரில் உங்களை வரவேற்க ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “கரோனா பெருந்தொற்றுக்கு இடையேயும் இத்தகைய கடினமான உழைப்பையும், கவனக் குவியலையும் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது ஊக்கமளிக்கிறது. இந்த தேசமே இந்திய ஹாக்கி அணியால் பெருமிதம் கொள்கிறது. ஹாக்கி, உலகெங்கும் உள்ள இந்தியர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்த அணி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும். அவர்கள் எதிர்காலத்தில் ஹாக்கியை தங்கள் வாழ்க்கைப் பாதையாகத் தேர்வு செய்ய உதவும். இது இந்திய ஹாக்கி அணியின் புதிய சகாப்தத்தின் தொடக்கம்” என்று நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here