முதல் இரண்டு டி20 போட்டிகளை போன்றே மூன்றாவது போட்டியிலும் இந்தியா டாஸை தோற்றது. முதலில் பேட்டிங் செய்தது. கொஞ்சம் சொதப்பலான பேட்டிங்தான். இப்போது ஸ்கோரை டிஃபண்ட் செய்ய வேண்டும். எல்லாமே ரிப்பீட் ஆனதை போல முதல் இரண்டு போட்டிகளின் ரிசல்ட்டும் இங்கே ரிப்பீட் ஆனதா? அதுதான் இல்லை. வந்தான்… சுட்டான்… ஆனால், அதன்பிறகு எதுவும் ரிப்பீட் ஆகவில்லை. புதிய ரிசல்ட் கிடைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றிருக்கிறது. தொடரை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. மேலே குறிப்பிட்டதை போல டாஸை வென்று தென்னாப்பிரிக்காவே முதலில் பந்து வீசியிருந்தது. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இந்த முறையும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்திய அணியில் பெர்ஃபார்மென்ஸில் சில மாற்றங்கள் தென்பட்டன. கடந்த இரண்டு போட்டிகளிலும் பெரிதாகச் சோபிக்காதவர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தனர்.
குறிப்பாக, பேட்டிங்கின் போது ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி தனது முதல் சர்வதேச அரைசதத்தை அடித்திருந்தார்.
இந்திய அணி பவர்ப்ளேயில் 57 ரன்களை எடுத்து விக்கெட்டே விடாமல் நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ருத்துராஜ் கெக்வாட்டே. ஷார்ட் பிட்ச்சாக வீசி Back Foot-ல் செட் செய்து Front Foot-ல் ஷாட் ஆடுவதற்கான ஏக்கத்தை உருவாக்கி அரைகுறையாக ஆட வைத்து ருத்துராஜை வீழ்த்துவதே தென்னாப்பிரிக்க பௌலர்களின் திட்டமாக இருந்தது. இதை இந்த மூன்றாவது போட்டியில் ருத்துராஜ் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். அவசரப்பட்டு Front Foot-ல் கமிட் ஆகாமல் காத்திருந்து நின்று ஆடினார். ரபாடா வீசிய முதல் ஓவரிலெல்லாம் பெரிதாக அட்டாக் செய்யவே நினைக்கவில்லை. அவர் வீசிய அடுத்த ஓவரிலும் கவர்ஸில் அடிப்பதைவிட க்ரீஸை விட்டு இறங்கி வந்து ஆடவே ருத்துராஜ் விருப்பப்பட்டார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்சரும் ருத்துராஜிற்குக் கிடைத்திருந்தது. முதல் சில ஓவர்களை ஓரளவுக்கு பார்த்து ஆடியவர், நார்க்கியா வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் மட்டும் தொடர்ந்து 5 பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.
பவர்ப்ளேக்குப் பிறகு ஸ்பின்னர்கள் வீசியதால் ரொம்பவே இலகுவாக அவர்களை எதிர்கொண்டு அரைசதத்தையும் கடந்தார். 35 பந்துகளில் 57 ரன்களை அடித்த நிலையில் ஸ்பின்னரான மகாராஜிடம் கேட்ச்சையும் கொடுத்து அவுட் ஆனார்.
ருத்துராஜூடன் ஓப்பனராக இறங்கிய இஷன் கிஷனுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். 35 பந்துகளில் 54 ரன்களை அடித்திருந்தார். பவர்ப்ளேயில் ருத்துராஜ் ஆதிக்கமாக ஆட, பவர்ப்ளே முடிந்து ஸ்பின்னர்கள் வந்த சமயத்தில் இஷன் கிஷன் இறங்கி ஆட ஆரம்பித்தார்.
ஷம்சி, மகாராஜா இடதுகை ஸ்பின்னர்களான இந்த இருவரையுமே நன்றாக அட்டாக் செய்திருந்தார். அடித்திருந்த 5 பவுண்டரிகளில் 4 பவுண்டரிகளை இவர்களின் ஓவர்களில்தான் அடித்திருந்தார். இரண்டு சிக்ஸர்களையும் பறக்கவிட்டிருந்தார்.
அரைசதத்தை கடந்த நிலையில் ப்ரெட்டோரியஸின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ருத்துராஜ் மற்றும் இஷன் கிஷன் இருவரும் ஆடிய சமயத்தில் இந்திய அணியின் ரன்ரேட் ஏறக்குறைய 10 க்கு அருகே அப்படியே சீராக இருந்தது. நல்ல தொடக்கம் கிடைத்த அளவுக்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை. கடைசிக்கட்ட ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை விட்டு ஏமாற்றமளித்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் ஓரளவுக்கு நின்று ஆடி 179 ரன்களுக்கு இந்திய அணியை கொண்டு சேர்த்திருந்தார். தொடக்கத்தில் ஆடிய ஆட்டத்திற்கு 200+ ஸ்கோரை இந்திய அணி எட்டியிருக்க வேண்டும்.
பேட்டிங்கில் கடைசிக்கட்டத்தில் இந்திய அணி கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், பந்துவீச்சு திருப்திகரமாகவே இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளிலுமே ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றிருந்தது. ஆனால், இங்கே தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட்டாக்கி டார்கெட்டை சிறப்பாக டிஃபண்ட் செய்து முடித்திருந்தது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் பவர்ப்ளேயில் முதல் ஸ்பெல்லில் விக்கெட் எடுத்துக் கொடுக்காவிடிலும் ஸ்பின்னர்கள் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தனர். கடந்த போட்டியில் மிடில் ஓவர்களில் க்ளாசென் ஸ்பின்னர்களை வெளுத்தெடுத்ததால் இந்த முறை சஹால், அக்ஸர் படேல் இருவரையுமே பவர்ப்ளேக்குள்ளாகவே ரிஷப் பண்ட் அழைத்து வந்தார்.
இந்த மாற்றத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது. அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவரிலேயே பவுமாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஹைலைட்டாக அமைந்தது சஹாலின் பௌலிங்க்தான். 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள்.
ப்ரெட்டோரியஸ், வாண்டர் டஸன், க்ளாசென் என மூன்று பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். க்ளாசென் கடந்த போட்டியில் சஹாலை கதிகலங்க வைத்திருந்தார். ஒரே ஓவரில் 23 ரன்களையெல்லாம் சஹால் கொடுத்திருந்தார். ஆனால், இங்கே அப்படியே தலைகீழாக மிகச்சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்தார் சஹால். அவரின் டைட்டான லெக் ப்ரேக்குகளை எதிர்கொள்ள முடியாமல் அத்தனை பேட்ஸ்மேன்களுமே திணறியிருந்தனர். அதேபோல, வழக்கம்போல ரிஸ்க் எடுத்து நன்றாகத் தூக்கி வீசியும் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தென்னாப்பிரிக்காவின் மைய சக்திகளை ஸ்பின்னர்கள் வீழ்த்திவிட ஹர்சல் படேல் மற்றவர்களைக் காலி செய்துவிட்டார். அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 19.1 ஓவர்களில் 131 ரன்களுக்கே தென்னாப்பிரிக்கா ஆல் அவுட் ஆனது. 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்தப் போட்டியையும் இந்தியா தோற்றிருந்தால் இந்தத் தொடரையும் இந்தியா இழந்திருக்கும்.
இந்தப் போட்டியை வென்றிருப்பதன் மூலம் இந்தியா இன்னும் இந்த தொடரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இதே வெற்றிகள் ரிப்பீட் ஆகுமா, இந்திய அணி தொடரை வெல்லுமா? கேப்டன் பண்ட் தன் முதல் வெற்றியைத் தொடர்ந்து, இந்தத் தொடரையும் வெல்வாரா? கமென்ட்டில் சொல்லுங்கள்.
Source link
sports.vikatan.com
உ.ஸ்ரீ