குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை இந்த ஐபிஎல் சீசனில் பதிவு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் இறங்கிய மும்பை அணிக்கு இம்முறை ஓப்பனிங் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. ரோஹித் சர்மா அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கியதுடன் பவர் பிளேயில் குஜராத் பந்துவீச்சை சிதறடித்தார். அதேபோல் இஷான் கிஷானும் தன் பங்கிற்கு அதிரடியாக ஆடினார். ரோஹித் 43 ரன்களும், இஷான் கிஷன் 45 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிம் டேவிட் 44 ரன்களும் எடுக்க மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.
178 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியின் சுப்மன் கில் இந்தப் போட்டியில் பார்முக்கு திரும்பினார். இதனால் ஓப்பனிங் ஜோடியை மும்பை பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 106 ரன்களை தொட்ட போதே முதல் விக்கெட்டை எடுத்தனர் மும்பை பவுலர்கள். 52 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில்லை முருகன் அஸ்வின் அவுட் ஆக்கினார். 13வது ஓவரின் முதல் பந்தில் கில்லை வெளியேற்றிய முருகன் அஸ்வின் கடைசி பந்தில் மற்றொரு ஓப்பனர் விருத்திமான் சஹாவையும் அவுட் ஆக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இந்த சரிவு குஜராத் அணிக்கு பாதகமாக அமைந்தது. அடுத்து வந்தவர்களில் கேப்டன் பாண்டியா 24 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும் கடைசி பந்தில் வெற்றியை நழுவவிட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட, மும்பை பவுலர் டேனியல் சாம்ஸ் சாதுரியமாக பந்துவீசி ரன்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினார். குறிப்பாக கடைசி ஓவரை திறம்பட வீசினார் சாம்ஸ். 6 பந்துகளில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது ஸ்லோ பாலாக வீசி குஜராத் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார். அவரின் உதவியால் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது.
Source link
www.hindutamil.in
செய்திப்பிரிவு