மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஷ்ரேயஸ், நித்திஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அபார ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங்-ஐ தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா அணி.
அந்த அணிக்காக பாபா இந்திரஜித் மற்றும் ஆரோன் ஃபின்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஃபின்ச், 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திரஜித், 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் நித்திஷ் ராணா 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ஷ்ரேயஸ், 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் பவுலிங்கில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களத்திற்கு வந்த ரிங்கு சிங்குடன் கூட்டணி அமைத்தார் நித்திஷ் ராணா. இருவரும் 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முடிவில் 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்று வந்த கொல்கத்தா அணி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்த போட்டியில் நடுவரின் வொய்ட் (Wide) முடிவுகளை பார்த்து வீரர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர்.
Source link
www.hindutamil.in
செய்திப்பிரிவு