HomeSportsவிளையாட்டு செய்திகள்RARIO: கிரிக்கெட் பார்க்கும் முறையை மாற்றப் போகிறதா NFT கார்ட்ஸ்?! | RARIO NFT Cards...

RARIO: கிரிக்கெட் பார்க்கும் முறையை மாற்றப் போகிறதா NFT கார்ட்ஸ்?! | RARIO NFT Cards is going to change the way of watching cricket sports


சிங்கப்பூர்: கடந்த 2021 வாக்கில் தொடங்கப்பட்டது ரேரியோ (RARIO). உலகிலேயே கிரிக்கெட் விளையாட்டுக்கான முதல் NFT தளம் இது என சொல்லப்படுகிறது. இந்தத் தளம் கிரிக்கெட் பார்க்கும் முறையை மாற்றும் எனவும் சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வேண்டுமென்றால் மைதானத்திற்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது. கால ஓட்டத்தில் ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி போன்றவற்றின் வரவினால் கிரிக்கெட் போட்டியை பார்ப்பது எளிதானது. அவரவர் வீட்டில் இருந்தபடி கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க உதவியது தொலைக்காட்சி. தொடர்ந்து மொபைல் போன்களின் வரவு, அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இன்றைய அவசர உலகில் அவரவர் போகிற போக்கில் தங்களது வேலைகளை கவனித்துக் கொண்டே நேரலையில் போட்டிகளை பார்த்து ரசிக்கவும் முடிகிறது.

இந்நிலையில், வரும் நாட்களில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் அல்லது கண்டுகளிக்கும் முறையை ரேரியோ தளம் மாற்றப்போவதாக சொல்லப்படுகிறது. உலகிலேயே கிரிக்கெட் விளையாட்டுக்கான முதல் NFT தளமாக ரேரியோ சொல்லப்படுகிறது. இதற்காக உலகளவில் ஆறு சர்வதேச கிரிக்கெட் லீக் தொடர்கள் மற்றும் சுமார் 900 கிரிக்கெட் வீரர்களின் அற்புதமான ஆட்டத்தை NFT-களாக மாற்றியுள்ளது ரேரியோ.

NFT? – பொதுவாக சொத்துகளை அசையும் சொத்து, அசையா சொத்து என நம் ஊர் பக்கங்களில் சொல்வார்கள். அந்த வகையில் NFT-யை டிஜிட்டல் சொத்து என சொல்லலாம். வீடியோ, போட்டோ போன்றவற்றை டிஜிட்டல் வடிவில் தனித்துவமாக பதிவு செய்வது தான் NFT. உலகின் முதல் குறுஞ்செய்தி (SMS) கூட NFT வடிவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை ஒருவகையில் டிஜிட்டல் உரிமை எனவும் சொல்லலாம். அதாவது டிஜிட்டல் வடிவில் உள்ள படங்களை அனைவரும் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம். ஆனால் அதனை வணிக ரீதியாக பயன்படுத்தினால் காப்பிரைட் சிக்கல் வரும் அல்லவா… அது போல தான் NFT-களும். இதனை கடைசியாக வாங்கியவர் தான் அதன் உரிமையாளர்.

2021 முதல் கடந்த ஏப்ரல் வரையில் சுமார் ஐம்பதாயிரம் NFT-களை 20 நாடுகளை சேர்ந்த ரசிகர்களிடத்தில் இந்த தளம் விற்பனை செய்துள்ளதாக தகவல். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தான் இந்த தளத்தின் மூலம் ரசிகர்கள், கிரிக்கெட் NFT-களை அதிகம் வாங்கி வருவதாக தகவல். இந்த தளத்தை 150 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார் அதன் இணை நிறுவனர் அங்கித் வாத்வா. இவர் டெல்லி ஐஐடி-யில் பயின்றவர்.

ரேரியோ கொண்டு வந்துள்ள மாற்றம் என்ன? கிரிக்கெட் விளையாட்டில் சில போட்டிகள், அந்த போட்டிகளின் சில தருணங்கள் ரசிகர்களின் மனதில் என்றென்றும் மறக்க முடியாத நினைவுகளாக நிறைந்திருக்கும். உதாரணமாக தோனி, 2011 உலகக் கோப்பை பைனலில் விளாசிய சிக்சர், ஷார்ஜாவில் சச்சின் டெண்டுல்கர் விளாசிய சதம், ஷேன் வார்ன் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்து என பலவற்றைச் சொல்லலாம். இப்போதும் அதை ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. இப்படிப்பட்ட நினைவுகளை தான் NFT-களாக தொகுத்து வழங்குகிறது இந்த தளம்.

இப்போதைக்கு உலக அளவில் நடைபெறும் ஆறு கிரிக்கெட் லீக் போட்டிகளின் தருணங்கள் மட்டுமே இந்த தளத்தில் NFT வடிவில் கிடைக்கிறது. இதனை வாங்க விரும்பும் ரசிகர்கள் அமெரிக்க டாலர்களில் வாங்க வேண்டி உள்ளது. ஏலம் கேட்பது போல விற்பனை நடைபெறுகிறது. அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட NFT விற்பனை செய்யப்படுகிறது. இந்த தளத்தின் மூலம் ரசிகர்கள் NFT-களை வாங்கவும், விற்கவும் செய்யலாம்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ரிஷப் பந்த், முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட், சேவாக், ஜாஹிர் கான் போன்றவர்கள் இந்த தளத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். சர்வதேச அளவில் டூப்ளசி, ஆரோன் ஃபின்ச், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான் போன்றோரும் இதில் உள்ளனர். அண்மையில் இந்த தளம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதனால் விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அற்புத தருணங்களை NFT வடிவில் பெற முடியும் என தெரிகிறது.

வரும் நாட்களில் ரேரியோ தளம் கிரிக்கெட் பார்க்கும் முறையை எந்த அளவிற்கு மாற்றத்தை கொண்டு வர போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





Source link

www.hindutamil.in

எல்லுச்சாமி கார்த்திக்

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read