Home சினிமா செய்திகள் கணம்: திரை விமர்சனம் | kanam movie review

கணம்: திரை விமர்சனம் | kanam movie review

0
கணம்: திரை விமர்சனம் | kanam movie review

இசைக் கலைஞன் ஆதி (சர்வாணந்த்), வீட்டு புரோக்கர் பாண்டி (ரமேஷ் திலக்), தனது கல்யாணத்துக்குப் பெண் தேடும் கதிர் (சதிஷ்) ஆகிய மூவரும் பள்ளிக் காலத்திலிருந்து இணை பிரியாத நண்பர்கள். இளமையிலேயே அம்மாவை இழந்த ஆதிக்கு ஒரு ஏக்கமும், மற்ற இருவருக்கும் தனிப்பட்ட அபிலாசைகளும் இருக்கின்றன. இந்த சமயத்தில் கால இயந்திரத்தை உருவாக்கிய ரங்கி குட்டப்பாலை (நாசர்) சந்திக்கிறார்கள்.

‘காலம் உங்களுக்கு வழங்க மறுத்த இரண்டாவது வாய்ப்பை, எனது கால இயந்திரம் உங்களுக்கு தரும். அதன் மூலம் கடந்த காலத்துக்குப் பயணித்து உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்; அப்படியே என்னுடைய விரும்பம் ஒன்றையும் நிறைவேற்றித் தாருங்கள்’ என்கிறார். குட்டப்பாலின் கோரிக்கையை ஏற்று கடந்த காலத்துக்குப் பயணிக்கும் மூவரும் அங்கே யாரையெல்லாம் சந்தித்தார்கள்? எதையெல்லாம் மாற்ற விரும்பினார்கள்? குட்டப்பாலின் கோரிக்கையை நிறைவேற்றினார்களா? மீண்டும் நிகழ்காலத்துக்கு அவர்களால் திரும்ப முடிந்தா என்பது கதை.

வாழ்க்கையின் போக்கில் நிகழ்ந்துவிடும் பல முக்கிய சம்பவங்கள், இழப்புகள் ஆகியவற்றை மாற்றியமைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது எக்காலத்துக்குமான மனித மனதின் ஏக்கங்களில் ஒன்று. அதைக் காலப் பயணத்தின் வழியாக சாத்தியமாக்கும் கற்பனைக்கு, ‘தாய்மை’ எனும் உலக உணர்வின் வழியாக உயிர்கொடுக்க முயன்று அதில் முழு வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக்.

வாழ்க்கையின் அர்த்தமும் அதன் ஆதாரசுருதியும் கடந்த காலத்தில் இல்லை, அவை நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது எனும் நடைமுறைத் தத்துவத்தை, உணர்வுகளால் கட்டியெழுப்பிய ‘கூஸ் பம்ப்’ காட்சிகளின் வழியாகச் சித்தரித்திருக்கிறார். வாழ்வின் போக்கில் இயல்பாய் உதிரும் தூய நகைச்சுவையையும் திறம்படப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நாயகன், அவனுடைய நண்பர்கள், தாய், தந்தை, காதலி, விஞ்ஞானிகள் என மனதில் தங்கும் கதாபாத்திரங்களின் உலகைச் சித்தரித்த விதம், பார்வையாளர்களை ஒரு ‘நாஸ்டால்ஜிக்’ காலப் பயணத்துக்குள் அழைத்துச் சென்று கடந்த கால நினைவுகளை கிளரும்படி செய்கிறது.

20 ஆண்டுகள் பின்னோக்கிய காலப் பயணத்தில் தங்களையே சிறுவர்களாகச் சந்தித்து அவர்களுடன் பழகும் மூன்று நண்பர்களும் எதிர்கொள்ளும் திருப்பங்கள், திகட்டாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதும் சரியான கால அளவுக்குள் படம் அடங்கிவிடுவதும் உயர்தரமான திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கிவிடுன்றன.

எத்தனை படங்களில் நடித்தாலும் நாசர் தாமொரு நடிப்பு ராட்சசன் என்பதை நிரூபிக்கிறார். அமலா பாலின் நடிப்பில் முதுமையின் களைப்பு இழைந்தாலும், காணாமல்போனபோது சிறுவனாக இருந்த தன் மகன் இளைஞனாக தன் முன்னால் நிற்பதாக நம்பி ‘குட்லூ’ என தாய்மை குறையாமல் வாஞ்சையுடன் அழைக்கும் அந்த ஒரு காட்சியில் கலங்க வைத்துவிடுகிறார். இந்த இருவருக்கும் அடுத்த இடத்தில் சர்வாணந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதிஷ், ரவீந்தர், சிறார் நடிகர்கள் என்கிற வரிசையில் அனைவருமே கதாபாத்திரங்களுக்கான நடிப்பால் ஈர்த்துவிடுகிறார்கள்.

1998இல் பெட்ரோல் விலை 24 ரூபாய் என்பதைச் சுட்டிக்காட்டி, 2019இல் காலி மது பாட்டில்களைக் காட்டி சிறார்கள் வழியாக கேள்வி எழுப்பி இயக்குநர் ஸ்ரீகார்த்திக், சிறந்த திரைக்கதை எழுத்தாளராக நம் மனதில் இடம்பிடித்துக்கொள்கிறார்

கால இயந்திரத்தைக் காட்டி, ‘குவாண்டம்’ இயற்பியலின் விதிகள் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருக்காமல், குட்டப்பாலும் மைக்கேலும் இணைந்து முதலில் உருவாக்கியபோது அதன் வடிவம் எப்படியிருந்தது, அதன்பின்னர் 20 ஆண்டுகள் கழித்து குட்டப்பால் உருவாக்கிய முன்னேறிய வடிவம் எப்படியிருந்தது என்பதை சித்தரித்த விதத்திலேயே பார்வையாளர்களுக்கு நம்பகத் தன்மையை உருவாக்கிவிட்டது வி.எஃப்.எக்ஸ் மற்றும் தொழில்நுட்பக் குழு.

இசை ஒரு கதாபாத்திரமாக மாறி படம் முழுவதும் இழைகிறது. ஜேக் பிஜாயின் இசையில் ‘ஒரு முறைப் பாரம்மா’ என்கிற பாடல் திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும் மனதுள் ஒலிக்கிறது.

கலை இயகுநர் சதீஷ்குமாரின் நேர்த்தியான கலை இயக்கமும் 1998, 2019 ஆகிய கால கட்டங்களை உணர்த்தும் சுஜித் சரங்கின் ஒளிப்பதிவும் இயக்குநர் ஸ்ரீகார்த்திக்கின் கற்பனையை நிஜம்போல் சாத்தியமாக்கித் தந்திருக்கின்றன.

இந்தியத் தன்மையிலிருந்து விலகாமல், அதேநேரம், மொழி, தேச எல்லைகளைக் கடந்து, உலகப் பொதுமையான மனித உணர்வுகளை இணைக்கும் ஒரு ‘டைம் ட்ராவல்’ படத்தை தமிழ் சினிமாவால் தர முடியும் என்பதற்கு பெருமைமிகு உதாரணமாக வந்திருக்கிறது ‘கணம்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here