Home Sports விளையாட்டு செய்திகள் Premier League: ஆர்செனல் 1; ஹாலண்ட் 15; ரொனால்டோ – 700! | இந்த வாரம் என்ன நடந்தது?

Premier League: ஆர்செனல் 1; ஹாலண்ட் 15; ரொனால்டோ – 700! | இந்த வாரம் என்ன நடந்தது?

0
Premier League: ஆர்செனல் 1; ஹாலண்ட் 15; ரொனால்டோ – 700! | இந்த வாரம் என்ன நடந்தது?

இந்த வாரம் பிரீமியர் லீகில் பல விஷயங்கள் அப்படியே தொடர்ந்திருக்கின்றன. ஹாலண்ட் கோலடித்துக்கொண்டே இருக்கிறார், லிவர்பூல் தடுமாறிக்கொண்டே இருக்கிறது, ஆர்செனல் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது! இந்த வழக்கமான விஷயங்களுக்கு நடுவே இந்த பிரீமியர் லீக் சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முதல் கோலும் அடிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்பதாவது கேம் வீக்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஆர்செனல் vs லிவர்பூல். வழக்கமாக லிவர்பூல் நல்ல ஃபார்மில் இருக்கும், ஆர்செனலோ தடுமாறிக்கொண்டிருக்கும். இந்த முறை நிலைமை அப்படியே தலைகீழ். பெரிய அணி, சிறிய அணி என்ற எந்த பாரபட்சமும் பார்க்காமல் சொதப்புகிறது லிவர்பூல். ஆர்செனலோ, எட்டில் ஏழு போட்டிகளை வென்று முதலிடத்தில் நீடித்துக்கொண்டிருந்தது. ஆர்செனல் அட்டாக்கர்கள் கோல்களாக அடித்துத் தள்ள, முகமது சலாவோ இதுவரை வெறும் 2 கோல்களே அடித்திருக்கிறார். இப்படி கடந்த சில ஆண்டுகளாக பார்த்திடாத நிலையில் இந்த இரண்டு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதின.

Arsenal

போட்டியின் தொடக்கமே அட்டகாசமாக இருந்தது. முதல் நிமிடத்திலேயே கோலடித்து எமிரேட்ஸ் அரங்கத்தை அதிரவைத்தார் கேப்ரியல் மார்டினெல்லி. அதிக அட்டாக்கர்களோடு களமிறங்கிய லிவர்பூல் அணி நடுகளத்தில் பெரிதும் தடுமாறியது. அதற்கு அந்த முதல் நிமிடமே முன்னுதாரணமாக அமைந்தது. போட்டித் தொடங்கிய சில நொடிகளிலேயே அவர்கள் பந்தை இழக்க, வேகமாக அட்டாக்கைத் தொடுத்தனர் ஆர்செனல் வீரர்கள். புகாயோ சகா பந்தை மார்டின் ஓடகார்டுக்கு அனுப்ப, மார்டினெல்லிக்கு ஒரு அட்டகாசமான த்ரூ பால் கொடுத்தார் ஆர்செனல் கேப்டன். அதைச் சிறப்பாக முடித்து தன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் மார்டினெல்லி.

36வது நிமிடத்தில் லிவர்பூல் அணி ஆட்டத்தைச் சமனாக்கியது. வலது விங்கில் இருந்து லூயிஸ் டியாஸ் கொடுத்த அற்புதமான கிராஸை, டார்வின் நூன்யஸ் கோலாக்கினார். ஆனால் முதல் பாதி முடிவதற்கு சில நொடிகளே இருக்கும்போது மீண்டும் முன்னிலை பெற்றது ஆர்செனல். இடது விங்கில் இருந்து சிறப்பாக முன்னேறிய மார்டினெல்லி பெனால்டி பாக்சுக்குள் அனுப்பிய பந்தை எளிதாக கோலாக்கினார் சகா.

ஆர்செனல் அணியின் அட்டாக்கால் தடுமாறிக்கொண்டிருந்த லிவர்பூலுக்கு மேலும் பல சிக்கல்கள் எழுந்தன. முதல் பாதியில் லூயிஸ் டியாஸ், அலெக்சாண்டர் ஆர்னால்ட் இருவருமே காயத்தால் வெளியேற்றப்பட்டனர். இருந்தாலும் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்டது லிவர்பூல். அதன் விளைவாக 53வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது அந்த அணி. டியோகோ ஜோடா கொடுத்த த்ரூ பாலை கோலாக்கினார் ராபர்டோ ஃபிர்மினோ. இந்த கோலுக்குக் காரணமாக இருந்த ஜோடாதான் லிவர்பூலின் மூன்றாவது கோலுக்கும் காரணமாக அமைந்தார்.

74வது நிமிடத்தில் ஆர்செனல் அட்டாக் செய்தபோது, கேப்ரியல் ஜீசுஸை பாக்சுக்குள் ஃபவுல் செய்து அந்த அணிக்குப் பெனால்டியைத் தாரைவார்த்தார் அவர். அந்த பெனால்டியை கோலாக்கி வெற்றிக்கான கோலை அடித்தார் சகா. அதன்பிறகு லிவர்பூல் எவ்வளவு போராடியும் அவர்களால் போட்டியை சமனாக்க முடியவில்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் லிவர்பூல், இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 10 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் பின்தங்கியிருக்கிறது. 9 போட்டிகளில் 24 புள்ளிகள் பெற்றிருக்கும் ஆர்செனல் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

Erling Haaland

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் அணி 2-1 என எவர்டனை வீழ்த்தியது. அலெக்ஸ் இவோபியின் கோலால் எவர்டன் ஐந்தாவது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றது. இருந்தாலும் ஆன்டனி அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே ஆட்டத்தை சமனாக்கினார். இதுவரை 3 பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், மூன்றிலுமே கோலடித்து அசத்தியிருக்கிறார். அந்த கோலுக்கு அசிஸ்ட் செய்த ஆன்டனி மார்ஷியல் காயத்தால் வெளியேற, மாற்று வீரராகக் களமிறங்கினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஃபார்மில் இல்லாததால் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் இந்த சீசனில் தன்னுடைய முதல் கோலைப் பதிவு செய்தார் அவர். கஸமிரோ கொடுத்த பாஸை கோலாக்கி, யுனைடெடுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் ரொனால்டோ. இது கிளப் கால்பந்து கரியரில் ரொனால்டோ அடிக்கும் 700வது கோல்.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோலடிக்காததால், 2-1 என வெற்றி பெற்றது மான்செஸ்டர் யுனைடட். கோல்கள் பற்றிப் பேசும்போது எர்லிங் ஹாலண்ட் பற்றியும் பேசித்தானே ஆகவேண்டும். சௌதாம்ப்டன் அணிக்கு எதிராகவும் ஒரு கோலடித்து தன் பிரீமியர் லீக் கணக்கை பதினைந்தாக உயர்த்தினார். இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹேரி கேன் 8 கோல்களும், அடுத்த இடத்திலிருக்கும் ஃபில் ஃபோடன் 6 கோல்களுமே அடித்திருக்கின்றனர். சௌதாம்ப்டன் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் தான் ஃபோடன் தன்னுடைய ஆறாவது கோலை அடித்தார். ஜோ கன்சலோ, ரியாத் மாரஸ் ஆகியோரும் கோலடிக்க 4-0 என எளிதாக வெற்றி பெற்றது மான்செஸ்டர் சிட்டி.

பிரீமியர் லீக் மேட்ச் டே – 9 முடிவுகள்

போர்ன்மௌத் 2 – 1 லெஸ்டர் சிட்டி

செல்சீ 3 – 0 வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ்

மான்செஸ்டர் சிட்டி 4 – 0 சௌதாம்ப்டன்

நியூகாசில் யுனைடட் 5 – 1 பிரென்ட்ஃபோர்ட்

பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 0 – 1 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

கிறிஸ்டல் பேலஸ் 2 – 1 லீட்ஸ் யுனைடட்

வெஸ்ட் ஹாம் யுனைடட் 3 – 1 ஃபுல்ஹாம்

ஆர்செனல் 3 – 2 லிவர்பூல்

எவர்டன் 1 – 2 மான்செஸ்டர் யுனைடட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here