Home தமிழ் News ஆரோக்கியம் உணவுச் சுற்றுலா: முன்ரோ தீவின் இலை அப்பம் | Food tour: Munroe island’s leaf appam

உணவுச் சுற்றுலா: முன்ரோ தீவின் இலை அப்பம் | Food tour: Munroe island’s leaf appam

0
உணவுச் சுற்றுலா: முன்ரோ தீவின் இலை அப்பம் | Food tour: Munroe island’s leaf appam

[ad_1]

’முன்ரோ தீவு’ கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது அந்த எழில் சூழ்ந்த தீவு! காலை ஐந்தரை மணிக்குக் கண்விழித்து, கல்லட ஆறு, மிகப்பெரிய அஸ்தமுடி ஏரி ஆகியவற்றின் அழகை ரசிக்க ஆயத்தமானோம்!

கடல் போலப் பரந்திருந்தது ஏரி. நீரிலிருந்து சூரியன் மெல்ல மெல்ல மேல் எழும்பும் காட்சியை மிதவைப் படகில் (Kayaking) மிதந்துகொண்டே ரசித்தோம். மிதவைப் படகின் உதவியால், அந்தத் தீவின் பெரும்பாலான பகுதிகளைப் பார்வையிட்டோம்! மிதவைப் படகில் நாமே துடுப்பு வீசிச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!

ரசனைக்குப் பஞ்சமில்லை

இரு புறமும் தென்னை மரங்கள், குறுகிய நீர்வழிப்பாதை, அந்தத் தீவிலிருந்த கிராமத்து மக்கள், மீன் பிடி வலைகள், மீனவர்கள், குளிர்ச்சியான காற்று என முன்ரோ தீவில் ரசனைக்குப் பஞ்சமில்லை. நிறைய நீர்வாழ் பறவைகளை அங்கே பார்க்க முடிந்தது.

தீவின் அழகில் மயங்கிய எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தால் பதினொரு மணியைத் தொட சில நிமிடங்களே இருந்தன. தங்கியிருந்த விடுதியில் காலை உணவு முடிந்திருந்தது. துடுப்புகள் கொண்டு மிதவைப் படகில் வீசி நகர்ந்ததால், பசி வயிற்றைக் கிள்ளியது.

அப்பத்தை அறிமுகப்படுத்திய முதியவர்

“உங்கள் மிதவைப் படகை எடுத்துக்கொண்டு, அந்தக் கரையில் இருக்கும் சிறிய சிற்றுண்டி கடைக்குச் செல்லுங்கள், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலை அப்பம் அங்கே கிடைக்கும்” என மலையாள மொழியில் வழிகாட்டினார் அங்கிருந்த ஒரு முதியவர்.

சுமார் இருபது நிமிட நீர்வழிப் பயணத்தின் மூலம் அவர் குறிப்பு கொடுத்த சிற்றுண்டிக் கடையை அடைந்தோம். கடை என்று சொல்வதைவிடச் சிற்றுண்டிகளைத் தயாரிக்கும் கிராமத்து வீடு என்று சொல்லலாம்.

கண்ணாடிக் குடுவைக்குள் ஒன்றிரண்டு இலை அப்பங்களே மீதமிருந்தன! ’யானைப் பசிக்குச் சோளப் பொரியா’ எனும் பழமொழி நினைவிற்கு வந்தது. ‘இலை அப்பங்கள் இன்னும் கூடுதலாகக் கிடைக்குமா, கொஞ்சம் பசியாக இருக்கிறது’ என அங்கிருந்த பெண்மணியிடம் கேட்டதும் சுடச்சுட இலை அப்பங்கள் தயாராகத் தொடங்கின!

எப்படித் தயாரிக்கிறார்கள்

தேங்காய்த் துருவல்களை நெய்விட்டு வதக்கி, அதில் வெல்லம் சேர்த்துப் பிசைந்துகொள்கிறார்கள். பசை போல வந்த பிறகு அதில் ஏலக்காய், சீரகத்தூள் தூவி மீண்டும் பிசைந்துகொள்கின்றனர். பிரிஞ்சி இலையின் ஓரத்தில் நீர்விட்டுப் பிசைந்த கோதுமை மாவைத் தட்டிவைக்கிறார்கள். அதற்குள் மேற்சொன்ன இனிப்புப் பசையைத் திணித்து பிரிஞ்சி இலையை மடித்துவிடுகிறார்கள். இப்படித் தயார் செய்யப்பட்டவற்றை இட்லி வேக வைப்பதைப் போல ஆவியில் அவித்து எடுக்க இலை அப்பம் தயார்! கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவில் செய்யப்பட்ட இலை அப்பங்களும் கேரளாவில் பிரபலம்தான்!

மருத்துவ குணமிக்க வயந இலை

இலை அப்பம் தயாரிக்கப் பயன்படும் பிரிஞ்சி இலையை ’வயந இலை’ என்று அழைக்கிறார்கள் கேரள மக்கள்! Cinnamomum tamala’ என்பது இதன் தாவரவியல் பெயர். ‘Indian bay leaf’ என்றும் அழைக்கலாம். சுருங்கச் சொன்னால் நமது பகுதியில் பிரியாணிக்குப் பயன்படுத்தப்படும் இலை, கேரள இலை அப்பத்திற்கு அடிப்படை பொருள்! இலையில் உள்ள மருத்துவ குணங்களுக்காகவே பிரியாணியில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆவியில் வேகும் போது ஏலம், சீரகம், நெய் ஆகியவற்றின் வாசனையோடு, பிரிஞ்சி இலையின் வாசனையும் காற்றில் மிதந்து எங்களை நோக்கி வந்து பசியை அதிகரிக்கச் செய்தன. அப்படியொரு வாசனை! வயந இலையைத் தவிர வாழை இலையிலும் இலை அப்பத்தைத் தயாரிக்கலாம்.

வயந இலையின் வாசனைக்கு, அதிலிருக்கும் யுஜெனால் (Eugenol), சைமீன் (Cymene) போன்ற ஆவியாகக்கூடிய எண்ணெய்கள் காரணமாகின்றன. இலைகளிலுள்ள ‘Sesquiterpenes’, நோய்களை எதிர்க்கும் தன்மையைக் கொடுக்கின்றன. செரியாமை, சுவாசக் கோளாறுகளை நிவர்த்தி செய்யும் மருத்துவ குணமும் வயன இலைகளுக்கு உண்டு!

இலை அப்பத்தில் சேர்க்கப்படும் ஏலம், சீரகத்திற்கு, செரிமானத்தைத் துரிதப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. உணவு எதுக்களித்தல், குமட்டல், வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளுக்குச் சிறப்பான தீர்வை ஏலமும் சீரகமும் கொடுக்கும். சேர்க்கப்பட்ட வெல்லம் உடல் ஊட்டத்திற்குத் துணை நிற்கும். தேங்காயின் மருத்துவ குணங்களைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலுள்ள நல வேதிப்பொருட்கள், உடலுக்கு நெய்ப்புத் தன்மையைக் கொடுத்து உடல் உறுப்புகளுக்கு வலுச் சேர்க்கும்.

ருசி அறிந்த பசி, பெரும்பசி அல்லவா!

ஆவியில் வெந்து தயாரான இலை அப்பங்கள் எங்கள் முன்னே பரிமாறப்பட்டன! எங்கள் பசியாற்ற கண்முன்னே வாசனைமிக்க ஆவியைப் பரப்பிக்கொண்டு காத்திருந்தன வயந இலை அப்பங்கள். ஒரு இலை அப்பத்தை எடுத்துச் சூடு பறக்க வாயில் வைத்துக் கடித்தபோது, நாவில் சுவையும் நாசியில் வாசனையும் ஒரே நேரத்தில் படர்ந்து கிளர்ச்சியூட்டின! உருகிய வெல்லத்தில் கலந்திருந்த தேங்காய்த் துருவல், ஏலம், சீரகம் போன்றவை சுவைக்குச் சிறப்பு சேர்த்தன. வயந இலையின் மூன்று நரம்புகளும் இலை அப்பத்தில் ஓவியமாகப் பதிந்திருந்தன!

எத்தனை இலை அப்பங்களைச் சாப்பிட்டோம் என்று கணக்கு வைக்கவில்லை. ஆவியில் வேக வேக எங்களின் பசியாற்றிக்கொண்டே இருந்தன இலை அப்பங்கள்.

அலாதியான அனுபவம்

தண்ணீரின் சலனத்தை ரசித்துக்கொண்டே, சுவைமிக்க ஒரு சிற்றுண்டியைச் சூடாகச் சாப்பிடும் சுகம் இருக்கிறதே, அடடா! அலாதியான அனுபவம் அது! பயணங்களில் மட்டுமே வாய்க்கும் தனித்துவமான சூழல் அது! அந்தப் பெண்மணிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மேலும் சில வயந இலை அப்பங்களை வாழை இலைக்குள் பொதித்துவைத்துக் கொண்டு மிதவைப் படகில் விடுதி நோக்கிக் கிளம்பினோம்! மிதவைப் படகில் திரும்பி வரும்போதும் இலை அப்பங்கள் எங்கள் பசியாற்றிக் கொண்டிருந்தன.

இலை அப்பத்தை, இலை அடை என்றும் சில பகுதிகளில் அழைக்கிறார்கள். கொழுக்கட்டையின் மறுவடிவம் என்று இலை அப்பத்தைச் சொல்லலாம். இந்த இலை அப்பத்தின் வாசனையைப் பல மடங்கு வித்தியாசப்படுத்துவதில் வயந இலைகளுக்குப் பெரும் பங்கு உண்டு!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here