Home Cinema `மக்களுக்கு இன்னும் இந்த தெளிவு வரலையே?!' – மம்மூட்டி #AppExclusive

`மக்களுக்கு இன்னும் இந்த தெளிவு வரலையே?!' – மம்மூட்டி #AppExclusive

0
`மக்களுக்கு இன்னும் இந்த தெளிவு வரலையே?!' – மம்மூட்டி #AppExclusive

[ad_1]

சென்னையில் மேட்டுக்குடியினரும் மந்திரிகளும் வாழும் கிரீன்வேஸ் ரோட்டில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள அந்த வீட்டுக்குள் நுழையும்போது, கேரளாவுக்குள் பிரவேசித்துவிட்ட பிரமை ஏற்படுகிறது. பச்சையான புல்வெளிகள், பூஞ்செடிகள், மரங்கள், டெரகோட்டா சிற்பங்கள் என்று அவருடைய ரசனையை வீடு வெளிப்படுத்திக்காட்டுகிறது. 

அரைக்கால் சட்டை, கைவைத்த டி-ஷர்ட்டில் ரொம்ப இயல்பாக வராண்டாவில் போட்டிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நம்மை வரவேற்றார். அம்பேத்கராக நடித்து மூன்றாவது தடவையாகத் தேசிய விருது வாங்கியிருக்கும் மம்மூட்டி.

Mammootty

“இந்திய அரசும் மகாராஷ்டிர மாநில அரசும் நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுடன் சேர்ந்து உருவாக்கிய படம் இது. இந்தியாவில் வாழ்ந்த மிகப்பெரிய தலைவரைப் பற்றிய படம் என்பதால், எல்லா வகையிலும் சிறப்பாக அமையவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். அம்பேத்கரின் வேடத்தில் நடிக்க, அவரைப் போலவே உருவம் கொண்ட ஒருவரைத் தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல. அமெரிக்கா, லண்டன் எல்லாம்கூடப் போய்த் தேடிப்பார்த்திருக்கிறார் படத்தின் டைரக்டர். ஏமாற்றத்துடன் இந்தியாவுக்குத் திரும்பிய டைரக்டரின் கண்ணில் என்னோட போட்டோ ஒன்று பட்டிருக்கிறது. கம்ப்யூட்டரில் அந்த போட்டோவை அம்பேத்களின் ஒரிஜினல் படத்துடன் மாட்ச் பண்ணிப் பார்த்திருக்கிறார்கள் என் முகம் பொருந்தவே எனக்குக் கிடைத்தது இந்த மகா சான்ஸ்!” – அம்பேத்கர் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது பற்றி உற்சாகமாகச் சொன்னார் மம்மூட்டி.

“அம்பேத்கராக நடித்த அனுபவம் பற்றி…?” 

“படப்பிடிப்புக்குப் போன பிறகுதான், மற்ற படங்களில் நடிப்பது போல இந்தப் படத்தில் லகுவாக நடித்துவிட முடியாது என்பதை உணர முடிந்தது. இது பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலகட்டத்தில் நடந்த உண்மைக் கதை. அதனால், அந்தக் காலகட்டத்தில் பேசப்பட்ட இங்கிலீஷில் நான் பேசி நடிக்க வேண்டும். அதற்காகவே, பிரிட்டிஷ் உச்சரிப்புடன் பேச எனக்கு ஒரு மணியை டியூஷன் ஏற்பாடு செய்தார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு, டப்பிங் பேசும்போது என் உச்சரிப்பைச் சரிசெய்ய, ஒரு பிரிட்டிஷ்காரர் உடனிருந்தார். 

தவிர, மானரிசம், அவர் நடை உடைகளைத் தெரிந்துகொள்ள…. அவர் பற்றிய டாகுமெண்டரியைப் பார்த்தேன். அவர் பற்றிய சில புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பூனா யூனிவர்சிட்டியில் வயதான அம்பேத்கர் கெட்டப்பில் படப்பிடிப்பு நடந்து முடிந்தவுடன், அந்த யூனிவர்சிட்டியில் பணிபுரியும் ஒரு பேராசிரியர் வந்து, என் காலில் விழுந்து வணங்கியதும் மகாராஷ்டிராவில் மாஹாடு என்ற ஊரிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள். அங்கு படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் எனக்குத் தீபாராதனை எடுத்து மகிழ்ந்ததும் என் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவங்கள்.

நாக்பூரில் படப்பிடிப்பு நடந்த போது இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு. வந்து அம்பேத்கர் வேடத்திலிருந்த என்னை வணங்கி, கண்ணிர் விட்டு அழுத காட்சி என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டது. அம்பேத்கர் என்ற மாபெரும் தலைவனின் சக்தியை முழுவதுமாக நான் புரிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் இவை.

ஒண்ணரை வருடம், அந்தப் படத்தில் நடிக்கும்வரை வேறு படங்களில்_நடிக்க வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். ஈடுபடுத்திக் கொண்டேன். இன்று சிறந்த நடிப்புக்காக, அந்தப் படத்துக்கு தேசிய விருதே கிடைத்திருக்கிறது என்னும் போது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் சிக்கவில்லை!”

பொதுமக்கள் பார்வைக்கு வராத இந்தப் படத்துக்கு அவார்டு கொடுத்திருக்கிறார்களே? அம்பேத்கர் படம் அவார்டுக்காக எடுக்கப்பட்டதா?”

“பத்து கோடி ரூபாய் செலவு செய்து யாராவது அவார்டுக்குப் படம் எடுப்பார்களா? காந்தி படத்தைப் போல உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் எடுக்கப்பட்ட படம்தான் இதுவும்.

விரைவில் மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர், இந்தியாவின் சட்ட அமைப்பையே எழுதுகிற ஆற்றல் பெற்ற திறமையான ஒரு மனிதர் அம்பேத்கர் என்று மேலெழுந்த வாரியாகத் தெரிந்துவைத்திருப்பவர்களுக்கு, அவரின் வாழ்க்கைப் பின்னணியை ஆழமாகச் சொல்லும் படம் இது.”

Mammootty

“தமிழ்ப் படங்களில் நீங்கள் நடிப்பது பணத்துக்காக என்கிறார்களே?” (பலமாகச் சிரிக்கிறார்)

“வேறு மொழிகளில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ரொம்ப காலமாகவே உண்டு. நன்றாக பேசத் தெரிந்த தமிழில் ஏன் நடிக்கக்கூடாது என்றுதான் தமிழ் படங்களில் நடிக்கிறேன். பணத்துக்காக இங்கே வந்திருந்தால் ஒன்பது ஆண்டு களில், குறைந்தது ஐம்பது படத்திலாவது நான் நடித்திருக்கலாமே. ஆனால், பத்து படங்களில்தான் நடித்திருக்கிறேன். தமிழில் திறமையான பல புதிய இளைஞர்கள் டெக்னிஷியன்கள் வருகிறார்கள். அவர்களுடன் இணையும்போது மனதுக்கு உற்சாகமாக இருக்கிறது. தமிழில் ஒரு படத்தில் நடித்து தேசிய விருது பெற வேண்டும் என்பதுதான் என் லட்சியம்!” 

“நீங்கள் சிறந்த போட்டோகிராபராமே?”

“ஐயையோ. அப்படியெல்லாம் இல்லை. எனக்கு நடிக்க மட்டுமே தெரியும். மற்றபடி எதுவுமே தெரியாது. நல்ல விலை உயர்ந்த காமிராவைக் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அப்படியொரு நல்ல காமிராவை வைத்திருக்கும் போட்டோ கிராபர் நான் என்று வேண்டுமானால் சொல்லலாம்!”

“டி.வி-யின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே. சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன கணிக்கிறீர்கள்?”

“சினிமா தியேட்டர் உள்ளே டி.வியைக் கொண்டுபோக முடியும். ஆனால், தியேட்டரை வீட்டுக்குள் கொண்டுவர முடியுமா? சினிமாவை யாராலும் எதனாலும் அழிக்க முடியாது. தற்காலிகமாக நடக்கும் ஒரு விஞ்ஞானப் போர் இது. வெளிநாட்டில் இதன் ஆட்டம் முடிந்துவிட்டது. நமது நாட்டிலும் விரைவில் முடிந்துவிடும்.”

Mammootty

“மதக்கலவரம், சாதிச்சண்டைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருப்பதைப் பற்றி..?”

“என்னைப் பொறுத்தவரை மக்கள் சமத்துவமாகத்தான் வாழ்கிறார்கள். ஆதாயம் தேடும் சில சமூகவிரோதிகள்தான் அவர்களிடையே பிரிவினையை உருவாக்கி, கலவரத்தைத் துரண்டுகிறார்கள். அரசியலுக்கு வருபவர்கள் உண்மையான சேவை செய்யும் எண்ணத்தில் வரவேண்டும். ஆனால், அவர்களில் பலர் சாதிக்கலவரங்களை உருவாக்கி விட்டுத் தங்கள் அரசியலை நடத்து கிறார்கள். எத்தனையோ படங்களில் இந்தக் கருத்தை வலியுறுத்தியும்கூட மக்களுக்கு இன்னும் தெளிவு வரவில்லையே” என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார் மம்மூட்டி.

– செல்லா

(“சினிமாவை யாராலும் எதனாலும் அழிக்க முடியாது” என்ற தலைப்பில் 08.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here